பெங்களூரு :ஒருவரது தோற்றத்தை பார்த்து எடை போடுவது தவறு என்பதற்கு சான்றாக, கர்நாடகாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் துமகுருவில் உள்ள கார் விற்பனை நிறுவனத்திற்கு கெம்பகவுடா என்ற விவசாயி சமீபத்தில் வந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த மகிந்திரா நிறுவனத்தின் 'பொலீரோ' கார் பற்றிய விபரங்களை ஊழியரிடம் கேட்டார். கெம்பகவுடாவின் தோற்றம், அழுக்கான ஆடை ஆகியவற்றைப் பார்த்த ஊழியர், 'பாக்கெட்டில் 10 ரூபாய் கூட இல்லாத உனக்கு 10 லட்சம் ரூபாய் கார் வாங்க ஆசையா...' என, கிண்டலாக கேட்டுள்ளார்.
இதையடுத்து ஊழியருக்கும், விவசாயி கெம்பகவுடாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. 'ஒரு மணி நேரத்தில் பணத்துடன் வருகிறேன். காரை தயாராக வைத்திரு' என, கெம்பகவுடா கோபத்துடன் சொல்லி விட்டு வெளியேறினார்.
ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாயுடன் கெம்பகவுடா திரும்பி வந்து உடனடியாக கார் தரும்படி கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஊழியர், மிகுந்த சங்கடத்துடன் கையை பிசைந்தார்.
ஏனெனில் 'பொலீரோ' கார் வேண்டி ஏராளமானோர் முன்பதிவு செய்து இருந்தனர்.
அதனால் உடனடியாக காரை தர முடியாத ஊழியர், கெம்பகவுடாவிடம் கை கூப்பி, காரை டெலிவரி செய்ய நான்கு நாட்கள் ஆகும் எனக் கூறி மன்னிப்பு கேட்டார்.
ஆனால் கார் வாங்க மறுத்து கெம்பகவுடா கடையை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்ச்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திராவின் சமூக வலைதள கணக்கிற்கும் இந்த பதிவை ஏராளமானோர் அனுப்பி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE