வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : நம் நாட்டைச் சேர்ந்த ஒருவரது 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயம் திருடப்பட்டு, அது மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கர வாதிகள் கைக்கு சென்று உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

'ஆன்லைன்' வாயிலாக பயன்படுத்தப்படும் கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயத்தில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். டில்லியின் பஷ்சிம்விஹார் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருந்தார்.கடந்த 2019ல் அவரது கணக்கில் இருந்த 30.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகள் திருடப்பட்டன.
இது தொடர்பாக அவர் டில்லி போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் தற்போதைய மதிப்பு 4.5 கோடி ரூபாய்.இந்நிலையில் மேற்காசிய நாடான இஸ்ரேலின் பயங்கரவாத தடுப்பு அமைப்பு, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கிரிப்டோகரன்சி முதலீடுகளை முடக்கியது.

இது தொடர்பான தகவல்களை இந்தியா உள்பட பல நாடுகளுக்கும், கடந்தாண்டு ஜூலையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தகவல்கள் குறித்து விசாரிக்கும்படி டில்லி போலீசின் சிறப்பு பிரிவுக்கு போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா உத்தரவிட்டிருந்தார்.இதன்படி, சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
டில்லியைச் சேர்ந்த தொழிலதிபரிடம் திருடப்பட்ட கிரிப்டோகரன்சியின் ஒரு பகுதி, பல கைகள் மாறி, இறுதியில் ஹமாஸ் பயங்கர அமைப்பின் கணக்குக்கு சென்றுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் எகிப்தில் உள்ள சிலருக்கு, மீதமுள்ள கிரிப்டோகரன்சிகள் கைமாறியுள்ளது தெரியவந்துள்ளது.கிரிப்டோகரன்சிகள் திருட்டு தொடர்பான மற்ற வழக்குகளிலும், தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE