வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ''உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள், நீதிமன்றத்திற்கு வரட்டும். சிறைக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கிறோம்,'' என, பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு வழக்கில், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் காட்டமாக கருத்து தெரிவித்தனர்.
கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக மற்றும் குடியிருப்புகளை அகற்ற, 2015ம் ஆண்டில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என, நில நிர்வாக கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நில நிர்வாக கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில் காணொலி வாயிலாக ஆஜராகினர்.
அதிகாரிகள் தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''ஒரு வாரத்தில், காலியிடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம். ''மூன்று வாரங்களில், வணிக கட்டுமானங்களை அகற்றுகிறோம். இந்த வழக்கை நிலுவையில் வைத்திருங்கள். 2018 முதல் அங்கு ஆக்கிரமிப்புகள் இல்லை,'' என்றார்.
நீதிபதிகள் கூறியதாவது:கடந்த 2015ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் அதை அமல்படுத்தவில்லை. அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு வரட்டும். சிறைக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கிறோம். அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை அகற்ற அதிகாரிகளுக்கு ஆர்வம் இல்லை.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக உள்ளனர்.நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீதிமன்ற மாண்பை பேண வேண்டும். அதில், எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். அதிகாரிகள் யாராக இருந்தாலும் சரி. நீதிமன்றத்துக்கான கவுரவத்தை விட்டுக் கொடுக்க முடியாது.அதிகாரிகளுக்கு எதற்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
அவர்களுக்கான கடமையை ஆற்ற வேண்டும். அவர்கள் சரிவர நிர்வாகம் செய்யாததால் தான், பெரும்பாலான வழக்குகள் வருகின்றன. ஆக்கிரமிப்புகள் வரும் போதே, உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கட்டடங்களை இடிப்பதாலும், பொருட்கள் வீணாகிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் தந்தால், அதுவும் ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போலாகும்.
இவ்வாறு, நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு மின் இணைப்பை துண்டிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரும் 28ம் தேதி அறிக்கை அளிக்கவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. அன்று அதிகாரிகள் ஆஜராகவும் உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE