வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிலைகளுடன் கூடிய, மூன்று அலங்கார ஊர்திகள், நாளை குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெற உள்ளன.
டில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழக அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் நடக்கும், குடியரசு தினக் கொண்டாட்டத்தில், அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும் என, முதல்வர் அறிவித்தார்.
மூன்று ஊர்திகள்
அதை நிறைவேற்றும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், நான்கு அலங்கார ஊர்திகள் இடம் பெற உள்ளன. முதல் ஊர்தியில், மங்கள வாத்திய இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி அரங்கேறும்.அடுத்து வரும் மூன்று ஊர்திகளில், வேலுார் சிப்பாய் கழகம், பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது தளகர்த்தர் சுந்தரலிங்கம், பூலிதேவன், வீரன் அழகுமுத்துகோன்.
மேலும், ஒண்டிவீரன், சுப்பிரமணிய சிவா, விஜயராகவாச்சாரியார், திருப்பூர் குமரன், சுதேசி கப்பல், வ.உ.சிதம்பரனார், திருப்பூர் குமரன், காமராஜர், கக்கன், காயிதே மில்லத், ராஜாஜி, முத்துராமலிங்க தேவர், இரட்டைமலை சீனிவாசன்.மேலும், வாஞ்சிநாதன், தீரன்சின்னமலை, ஜோசப் செல்லதுரை குமரப்பா, ஈ.வெ.ராமசாமி மற்றும் சுதந்திரத்திற்கு பாடுபட்ட பல்வேறு வீரர்கள் சிலைகள் இடம்பெற உள்ளன.

அனுமதி இல்லை
நாளை காலை 8:00 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் நடக்கும் குடியரசு தின விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றுகிறார். பல்வேறு விருதுகளை முதல்வர் வழங்குகிறார். அதன்பின், முப்படை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் அணிவகுப்பு நடக்கும்.
கொரோனா தொற்று காரணமாக, இந்த முறை அரசு துறை அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்க மக்களுக்கு அனுமதி இல்லை. விழா, அரை மணி நேரத்தில் நிறைவு பெறும்.
தேநீர் விருந்து ஒத்திவைப்பு!
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று, காலை கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்த பின், கவர்னர் மாளிகையில், தேநீர் விருந்து நடக்கும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக, தேநீர் விருந்து ஒத்தி வைக்கப்படுவதாக, கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
'தற்போதுள்ள சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின், தேநீர் விருந்து நடத்தப்படும். தமிழக மக்கள் அனைவரும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும், அரசின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்' என, கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE