வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : புதிதாக அறிமுகமாகும் மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனை, பரிசோதனைகள் வாயிலாக உறுதி செய்வதற்கான அனுமதியை, தமிழக பொது சுகாதாரத் துறைக்கு, மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்தியாவில் அறிமுகமாகும் புதிய மருந்துகள், நோயாளிகளின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு முன், அதை சில தன்னார்வலர்கள் உடலில் செலுத்தி, ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். இதை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் என்ற ஐ.சி.எம்.ஆர்., செய்கிறது.
எந்த விதமான எதிர்விளைவுகளோ, பாதிப்புகளோ இல்லை என உறுதி செய்யப்பட்ட பின், அந்த மருந்துகள் சந்தையில் அனுமதிக்கப்படும்.தற்போது, மாநில அளவில் மறு உறுதி செய்வதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ள, தமிழக பொது சுகாதாரத் துறைக்கு, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் வாயிலாக, ஐ.சி.எம்.ஆர்., அனுமதித்த மருந்துகளையோ, புதிதாக மாநில அளவில் அறிமுகப்படுத்தப்படும் மருந்துகளையோ, தமிழக பொது சுகாதாரத் துறை ஆய்வுக்கு உட்படுத்தலாம். மருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின், மாநிலத்தில் விற்பனைக்கான அனுமதியை, தமிழக பொது சுகாதாரத் துறை வழங்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE