வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகத்தில், பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை மீண்டும் திறந்து, நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து, பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால், பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வரும், 31ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத் தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பிப்ரவரி முதல் பள்ளிகளை திறக்கலாமா என, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் தலைமையில், பள்ளி கல்வி அலுவலக வளாகத்தில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வியின் பல்வேறு பிரிவுகளின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா, அதற்கான தேவை உள்ளதா என விவாதிக்கப்பட்டது. மேலும், பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், புதிதாக அறிமுகமான திட்டங்களின் முன்னேற்றம், பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை செயலகத்திலும், பள்ளிகளை பிப்ரவரி முதல் திறப்பது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் செயலக அதிகாரிகள் ஆலோசனை நடத்திஉள்ளனர். ஊரடங்கின் அடுத்த நிலை குறித்து, முதல்வர் ஸ்டாலின் நடத்தும் அடுத்த ஆலோசனை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளது.'ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுளளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE