தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி, மத மாற்ற அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கிளம்பியது. அதையடுத்து, மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட பள்ளி ஊழியர்கள் மீது நடவடிக்கைக் கோரி, மாணவியின் பெற்றோர் சட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.,வும் போராட்டம் நடத்தி வருகிறது.
மிரட்டல்
இந்நிலையில், 'மத மாற்ற முயற்சி நடக்கவில்லை' என, அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளார், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ். இது குறித்து, நம் நாளிதழுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: மத மாற்ற அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டது குறித்து, அந்த மாணவி கொடுத்த வீடியோ பேட்டி வெளியான பின் தான் எல்லாருக்கும் தெரிய வந்தது. ஆனால், 'அந்த வீடியோ பதிவையே எடுத்திருக்க கூடாது' என, அமைச்சர் மகேஷ் கூறுகிறார்.
![]()
|
தன்னை மதம் மாற கூறி கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்துதான், சம்பந்தப்பட்ட மாணவி வேறு வழியின்றி, களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். அந்த நிலையிலும், 'இந்த பிரச்னையை வெளியே சொன்னால், பள்ளியை விட்டு நீக்கி விடுவோம்' என, விடுதியில் இருப்போர் மிரட்டியுள்ளனர். அதனால் தான், பயந்து போன மாணவி எதையும் வெளியில் சொல்லாமல் மறைத்திருக்கிறார். அதை உறவுக்காரர்களிடம் தெளிவாக கூறி இருக்கிறார்.
அப்படி பயந்து இருந்தவர், போலீஸ் விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மாஜிஸ்திரேட் விசாரணை என்றதும், கூடுதல் பயத்தில், நடந்ததை முழுமையாக சொல்லாமல் விட்டுள்ளார். அந்த மாணவி, எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான போலீஸ் விசாரணை நடக்கும்போது, தனிப்பட்ட முறையில் விசாரித்து பெறப்பட்ட வாக்குமூலத்தை, மாஜிஸ்திரேட், சீலிடப்பட்ட உறையில் வைத்து தான் பாதுகாக்க வேண்டும்.
கோர்ட்டில் விசாரணை முடிவதற்குள்ளாக, மாஜிஸ்திரேட் அறிக்கையை போலீஸ் எடுத்து வந்து, பத்திரிகைகளுக்கு கொடுத்திருக்கிறது. அதாவது, மாணவியின் தற்கொலை, மத மாற்ற அழுத்தத்துக்காக நடக்கவில்லை என்று கூறி, பிரச்னையை அப்படியே அமுக்கி போடுவதுதான் அவர்கள் திட்டம்.இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து முடிப்பதற்கு உள்ளாகவே, இந்த மரணத்தின் பின்புலத்தில் மத மாற்ற அழுத்தம் எதுவும் இல்லை என்பதை நிறுவும் தீவிரத்தில், அரசுக்காக போலீஸ் வேகமாக செயல்படுகிறது.
மாணவி அச்சம்
சிகிச்சையில் இருந்த மாணவியிடம், உறவுக்காரர் ஒருவர் கேள்விகள் கேட்டு, மாணவி அளித்த பதிலை பதிவு செய்து, அதை வெளியிட்டுள்ளார். அப்படியொரு வீடியோ பதிவு எடுக்கப்பட்டதே தவறு என்று அமைச்சர் மகேஷ் சொல்வது, தஞ்சை மாவட்ட எஸ்.பி., ரவளி ப்ரியா ஏற்கனவே கூறியது போன்றே உள்ளது. மாணவியை துாண்டிவிட்டு கேள்வி கேட்பது போல கேட்டு, மாணவியின் பதிலை பதிவு செய்துள்ளனர். அதற்கு, மாணவி தெளிவாக பதில் சொல்லவில்லை எனவும் அமைச்சர் கூறி இருக்கிறார்.
சாகும் நேரத்தில், மரணத்தோடு போராடும் ஒரு பெண், பவுடர் பூசி, 'மேக் அப்' போட்டு வந்து, கேமராவுக்கு போஸ் கொடுத்து, 'ரீடேக்' எல்லாம் எடுத்து, தெளிவாகப் பேசி பதிவு செய்வாரா என்ன! அமைச்சரின் சிந்தனையே கேலிக்கூத்தாக இருக்கிறது. அதுமட்டுமல்ல... விடுதி வார்டன் சகாயமேரி தான், சம்பந்தப்பட்ட மாணவிக்கு பள்ளி கட்டணம் செலுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்; இருக்கட்டும். அதற்காக, மதம் மாற்ற அழுத்தம் கொடுக்க கூறி, யாராவது அவருக்கு 'அசைன்மென்ட்' கொடுத்திருக்கின்றனரா?
மாணவி இறந்ததை தொடர்ந்து, முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறாராம். அந்த அறிக்கையின்படி, மாணவியுடன் படிக்கும் 30 பேரிடம் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினராம். விசாரணையின் போது, யாருமே பள்ளி தரப்பில் இருந்து தங்களை மதம் மாற கூறி அழுத்தம் கொடுக்கவில்லை என கூறி இருக்கின்றனராம்.
அதாவது, களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு, இறக்கும் தருவாயில் கூட, பள்ளியிலும், விடுதியிலும் மிரட்டப்பட்டதால், விடுதியில் என்ன நடந்தது என்பதை கூறவே அச்சப்பட்ட மாணவி, கடைசி நேரத்தில் தான், உறவினரிடம் தன் நிலையை பதிவு செய்திருக்கிறார் என்றால், எந்தளவுக்கு மிரட்டப்பட்டு இருப்பார் என பாருங்கள்.சாகும் நிலையில் கூட, நடந்ததை சொல்ல மாணவி பயந்திருந்த நிலையில், இப்பவும் அந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவியரில் 30 பேர் மட்டும், தங்களுக்கு என்ன நடந்தது என்பதை மறைக்காமல் சொல்லி விடுவரா என்ன?
அவர்களிடம் விசாரித்தோம், ஒருமுறை கூட பள்ளியில் மதம் மாற்றும் நிகழ்வு நடக்கவில்லை என, அப்பள்ளி மாணவியர் கூறியதாக, முதன்மை கல்வி அதிகாரி அறிக்கையை மேற்கோள்காட்டி அமைச்சர் கூறியிருக்கிறார்.
நியாயம் கிடைக்காது
அந்த பகுதியில் இருக்கும் கிறிஸ்துவ பள்ளிகள், கல்வியை போதிக்கும் சேவையை மட்டுமே செய்து வருவது, தனக்கு நன்கு தெரியும் என்றும், அவர்கள் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட மாட்டார்கள் என்றும், அமைச்சர் சான்றிதழ் அளித்திருக்கிறார். அதாவது, மதம் மாற்றும் அழுத்தத்தில் மாணவி இறக்கவில்லை என்பது தான் அவரது கூற்று.
நடந்த சம்பவத்துக்கு, அமைச்சர் முன்கூட்டியே தீர்ப்பு எழுதி விட்டார். அப்புறம் எதற்கு போலீஸ் விசாரணை? அமைச்சரே முடிவாக, இந்த மரணத்தின் பின்னணியில் மத மாற்ற அழுத்தம் இல்லை என்று கூறிய பின், போலீஸ் மட்டும் தன் ரிப்போர்ட்டை மாற்றியா எழுதி கொடுக்க போகிறது? மொத்தத்தில் தீர்ப்பு எழுதி விட்டு விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர். அதனால் தான், தமிழக அரசிடம் துளி கூட நியாயம் கிடைக்காது என முடிவெடுத்து, மாணவியின் பெற்றோர், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வாயிலாக சட்ட போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழக அரசு விசாரணை முடிவு எப்படி இருக்க போகிறது என்பதைத் தான், கல்வி அமைச்சர் முன்கூட்டியே கூறி விட்டார். இனி, அவர்கள் விசாரணையை நம்பி பிரயோஜனமில்லை. மாணவி தற்கொலை விவகாரத்தை, தமிழக போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. அதனால் தான், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு அனுப்ப வேண்டும் என, தமிழக பா.ஜ.,வும் வலியுறுத்துகிறது. இந்த மரணத்துக்கு நியாயம் கேட்டு, தமிழக பா.ஜ., போராடுவதை அடுத்து, ஒட்டுமொத்த கிறிஸ்துவர்களுக்கு எதிராக இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்க, அரசு தரப்பும், தி.மு.க.,வும் முயற்சிக்கின்றன.
நம்பிக்கை
நியாயத்துக்கு புறம்பாக, கிறிஸ்துவர்களுக்கு ஒரு பாதிப்பு என்றாலும், பா.ஜ., குரல் கொடுக்கும். அதற்காக, எங்காவது மதம் மாற்றும் முயற்சி நடந்தாலும், அதையும் தமிழக பா.ஜ., ஒரு நாளும் விடாது. போலீஸ் முடிவு எப்படி இருக்கும் என்பது, இப்போதே தெரிந்து விட்டது. என்றாலும், நியாயத்திற்காக செயல்படும் நீதிமன்றம், சரியான நீதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது; பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று! இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE