பொன்னேரி--தொடர்ந்து நெல் பயிர்களை பயிரிடுவதால், மண் வளம் பாதிப்பதால், அதை காக்க பயறு வகைகளை பயிரிட வேண்டும் என, வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.இது தொடர்பாக, மீஞ்சூர் வட்டார உதவி இயக்குனர் ஆர்.அகிலா தெரிவித்து உள்ளதாவது:விவசாயிகள் தொடர்ந்து, மூன்று போகமும் நெல் பயிரையே பயிர் செய்யும்போது மண் வளம் பாதிக்கப்படுவதுடன், நீர் வளமும் குறைகிறது.மண் வளத்தை பாதுகாக்க பயிர் சுழற்சி மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.மண் வளம் பெருகினால்தான் மகசூல் அதிகரிக்கும். சம்பா நெல் அறுவடைக்கு பின் வயலில் பச்சை பயறு அல்லது உளுந்தை விதையை விதைத்து மண் வளத்தை பெருக்க வேண்டும்.இந்த பயறு வகைகளை பயிரிடுவதன் மூலம், குறைந்த செல்வில், குறைந்த நீர் தேவையில் அதிக மசூசூல் மற்றும் லாபம் பெறலாம்.மேலும், மண் வளம் பெருகுவதால், அடுத்த சொர்ணவாரி பருவத்தில் அதிக மகசூல் பெற முடியும்.விவசாயிகளுக்கு தேவையான பயறு வகை விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவை ஆகியவை மானிய விலையில் வேளாண் விரிவாக்கம் மையங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.விவசாயிகள் அவற்றை வாங்கி பயன் பெற வேண்டும். தமிழகத்தில் பயறு வகை உற்பத்தியில் தன்னிறைவு அடைய வழிவகை செய்திட விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.