மும்பை : மஹாராஷ்டிராவில் யார் பெரிய கட்சி என்பது தொடர்பாக சிவசேனா - பா.ஜ., இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா கட்சி நிறுவனரான பால் தாக்கரேவின் 96வது பிறந்தநாளை ஒட்டி மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பேசியதாவது: பா.ஜ.,வின் சந்தர்ப்பவாத ஹிந்துத்துவம், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டு என்பதைப் புரிந்துகொண்டேன். பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், மாநில பா.ஜ., தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:அவ்வப்போது ஏற்படும் ஞாபக மறதியால் சிவசேனா பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பா.ஜ., இருந்த நேரத்தில் சிவசேனா கட்சியே உதயமாகவில்லை என்பதை உத்தவ் தாக்கரேவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 1984ல் நடந்த தேர்தல்களில் பா.ஜ., சின்னத்தில் தான் சிவசேனா வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் வட மாநிலங்களில் சிவசேனாவுக்கு ஆதரவு அலை வீசியது. அப்போது நாங்கள் தனித்து போட்டியிட்டிருந்தால் சிவசேனாவை சேர்ந்தவர் பிரதமராகியிருப்பார். பா.ஜ.,வுக்காக அந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE