இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: அல்வாவுடன் வந்தவர்கள் அலேக்காக கைது| Dinamalar

இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': அல்வா'வுடன் வந்தவர்கள் 'அலேக்'காக கைது

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (4) | |
தமிழக நிகழ்வுகள்சிறுமியை கடத்தி திருமணம் வாலிபருக்கு 'போக்சோ'திருமங்கலம்-சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த விழுப்புரம் வாலிபரை, போலீசார் 'போக்சோ'வில் நேற்று கைது செய்தனர்.மேற்கு முகப்பேரைச் சேர்ந்த தந்தை ஒருவர் நொளம்பூர் காவல் நிலையத்தில், தனது 16 வயது மகளை காணவில்லை என, கடந்த 18ம் தேதி புகார்
தமிழக நிகழ்வுகள்
சிறுமியை கடத்தி திருமணம் வாலிபருக்கு 'போக்சோ'திருமங்கலம்-சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த விழுப்புரம் வாலிபரை, போலீசார் 'போக்சோ'வில் நேற்று கைது செய்தனர்.மேற்கு முகப்பேரைச் சேர்ந்த தந்தை ஒருவர் நொளம்பூர் காவல் நிலையத்தில், தனது 16 வயது மகளை காணவில்லை என, கடந்த 18ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.இந்நிலையில், 20ம் தேதி சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார். பின், வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, 21ம் தேதி சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது.


latest tamil news
விசாரணையில், விழுப்புரத்தைச் சேர்ந்த சக்திவேல், 27, என்பவர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, 18ம் தேதி விழுப்புரத்திற்கு கடத்திச் சென்று, 19ம் தேதி திருமணம் செய்தது தெரிந்தது. பின், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிந்தது.இதையடுத்து, சக்திவேலை போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்த போது, பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து சக்திவேலை 'போக்சோ'வில் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


முயல் வேட்டைக்கு சென்றவர் மின் வேலியில் சிக்கி பலிதிருத்தணி-திருத்தணி அருகே, முயல் வேட்டைக்கு சென்ற இருளர் ஒருவர், மின் வேலியில் சிக்கி இறந்தார்.திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு, இருளர் காலனியைச் சேர்ந்தவர் பழனி, 42. இவர், நேற்று முன்தினம் இரவு, முயல் வேட்டைக்கு வீட்டிலிருந்து சென்றார். நேற்று காலை ஆகியும், பழனி வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று மதியம், வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரின் கரும்பு தோட்டத்தின் அருகே உள்ள மின் வேலியில் சிக்கி, உடல் கருகி இறந்த நிலையில் இருந்த பழனியை, அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனியின் பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


போலி நகை பெற்று ரூ.1.64 கோடி மோசடி கூட்டுறவு வங்கி ஊழியர் இருவர் கைதுகாஞ்சிபுரம்-உத்திரமேரூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், போலி நகைளை பெற்று நகை கடன் 1.64 கோடி ரூபாய் மோசடி செய்த வங்கி ஊழியர்கள் இருவரை, காஞ்சிபுரம் வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் செயலர் கலைசெல்வி, 58, நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார், 47, மேற்பார்வையாளர் ஜெயஸ்ரீ, 51, ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.இவர்கள், வங்கி உறுப்பினர்கள் 24 பேருக்கு, 1.64 கோடி ரூபாய் நகை கடன் கொடுத்துள்ளனர். ஆண்டு தணிக்கையின் போது, இந்த நகைகள் அனைத்தும் போலி என்பதும், கடந்த 2019, அக்., 18 முதல் 2021 மார்ச் 29 வரை இந்த மோசடி நடந்துள்ளதும், தெரியவந்தது.

இதுகுறித்து, நகைகளை ஆய்வு செய்த உதவி கூட்டுறவு பதிவாளர் அமுதா, மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் சுவாதிக்கு தெரிவித்தார்.அவர் விசாரணை செய்ததில், போலி நகை பெற்று கோடிக்கணக்கில் கடன் தொகை வழங்கியது உறுதியானது.அவரது புகாரையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு போலீசார் விசாரித்தனர்.

தலைமறைவாக இருந்த மேற்கண்ட மூவரை, துணை காவல் கண்காணிப்பாளர் முரளி, ஆய்வாளர் தேன்மொழி மற்றும் போலீசார் தேடினர்.இந்நிலையில் கலைசெல்வி, விஜயகுமார் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஜெயஸ்ரீயை தேடுகின்றனர். இருவரையும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தன


வாலிபரை கல்லால் அடித்து கொல்ல முயன்றவர்கள் கைதுராயபுரம்-குடிபோதையில் பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாலிபரை, கல்லால் அடித்துக் கொல்ல முயன்ற நால்வரை, போலீசார் கைது செய்தனர்.காசிமேடு, புதிய அமராஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 33; தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் ஜெயசீலன், லாரி மெக்கானிக் கடை வைத்துள்ளார்.

இவர்கள், நேற்று இரவு ஜெயசீலன் கடையில் போதையில் இருந்துள்ளனர். எண்ணுார், நேதாஜி நகர், 3வது தெருவைச் சேர்ந்த சோனியா, 22, மண்ணடியைச் சேர்ந்த ஹாசினி, 19, ஆகியோர் ஜெயசீலன் கடை அருகில் நின்றிருந்தனர்.அவர்களிடம், சுரேஷ் ஆபாசமாக பேசியுள்ளார். ஆத்திரமடைந்த பெண்கள், எண்ணுார், நேதாஜி நகர், 3வது தெருவைச் சேர்ந்த சரத்குமார், 32, ராயபுரம், செட்டி தோட்டத்தைச் சேர்ந்த பிரதாப், 20, ஆகியோரை அழைத்து வந்து, சுரேஷை கல்லால் தலையில் தாக்கினர்.இதில் படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ராயபுரம் போலீசார் வழக்கு பதிந்து சோனியா, ஹாசினி, சரத்குமார், பிரதாப் ஆகியோரை கைது செய்தனர். சரத்குமார் எண்ணுார் காவல் நிலையத்தில் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்.


கடன் கொடுக்க மறுத்த வியாபாரிக்கு வெட்டு


தாம்பரம்--மாடம்பாக்கத்தில், கடன் கொடுக்க மறுத்த மளிகை கடை உரிமையாளரை, அரிவாளால் வெட்டி தப்பியவரை, சேலையூர் போலீசார் தேடி வருகின்றனர்.தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், பெரியார் நகரைச் சேர்ந்தவர், வீரராகவன், 37; மளிகை கடை வைத்துள்ளார். நேற்று மதியம், அப்பகுதியில் வசிக்கும் சிவசக்தி, 21 என்ற பெண் வீரராகவன் கடைக்கு வந்து, மளிகை பொருட்கள் கேட்டார்.ஏற்கனவே 4,500 ரூபாய் கடன் பாக்கி இருப்பதால், அதை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கி செல்லுமாறு வீரராகவன் கூறினார்.

மேலும், கடன் கொடுக்க மறுத்தார். இதையடுத்து, வீட்டிற்கு திரும்பிய சிவசக்தி, கணவர் சுமன், 25 இடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கடைக்கு சென்ற சுமன், கையில் வைத்திருந்த அரிவாளால், வீரராகவனை வெட்டி, அங்கிருந்து தப்பிச் சென்றார்.பலத்த காயமடைந்த வீரராகவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான மதனை, சேலையூர் போலீசார் தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம்., கார்டை மாற்றிக் கொடுத்து மூதாட்டியிடம் ரூ.19 ஆயிரம் மோசடிதிண்டிவனம்-திண்டிவனத்தில் ஏ.டி.எம்., கார்டை மாற்றிக் கொடுத்து மூதாட்டியிடம் 19 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திண்டிவனம், நெய்குப்பி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 72; விவசாயி. இவரது மனைவி சாந்தி, 60; இருவரும் நேற்று காலை நெல் விற்ற பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க நேரு வீதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்குச் சென்றனர்.அங்கு கிருஷ்ணன் மொபட்டை நிறுத்திவிட்டு வருவதற்குள், சாந்தி ஏ.டி.எம்., மையத்தில் உள்ளே நின்றிருந்த ஒரு நபரிடம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார்.

சாந்தியிடம் இருந்து கார்டை வாங்கிய நபர், பின் நெம்பரை தெரிந்து கொண்டு பணம் இல்லை என கார்டை மாற்றிக் கொடுத்துள்ளார்.பின், அந்த கார்டை பயன்படுத்தி 19 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தலைமறைவானார். இது தெரியாமல் தம்பதி இருவரும் வங்கிக்குச் சென்று பணம் எடுக்க முயன்றனர். அப்போது மர்ம நபர் 19 ஆயிரம் ரூபாய் எடுத்தது தெரியவந்தது.புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் ஏ.டி.எம்., மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.


பெண்ணுக்கு கத்திக்குத்து:வாலிபர் சிறையிலடைப்புகோவை:கோவையில், முன்னாள் காதலியின் தாயாரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.கோவை, பி.என்.புதுார், சுந்தரம் வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ரமேஷ்,29, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்தார். சில மாதங்களாக ரமேஷ் வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றியதால், மனம் வெறுத்த அந்த பெண், காதலை முறித்துக் கொண்டார். ஆனாலும் விடாத ரமேஷ், அப்பெண்ணுக்கு தொடர்ந்து போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்தார்.பெண்ணின் பெற்றோர், ஆர்.எஸ்.புரம் போலீசில் கடந்தாண்டு டிச., 14ல் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்தனர்.

இருப்பினும், அப்பெண்ணுக்கு தொல்லை கொடுப்பதை ரமேஷ் நிறுத்தவில்லை. 22ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பூ மார்க்கெட்டில் அந்த பெண்ணும், அவரது தாயாரும் நடந்து சென்றனர்.அங்கு வந்த வாலிபர், அந்த பெண்ணுடன் பேச முயற்சித்தார். அதை, அவரது தாயார் தடுத்தார். ஆத்திரம் அடைந்த ரமேஷ், கத்தியால் அந்த பெண்ணை தாக்க முயற்சித்தார். தடுக்க முயற்சித்த தாயார் கழுத்தில் சரமாரியாக குத்தி விட்டு, தப்பியோடினார். அருகே இருந்தவர்கள், பெண்ணின் தாயாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி விசாரித்து, வாலிபர் ரமேஷை கைது செய்து, சிறையில் அடைத்தார்.


கடனை தீர்க்க சிறுவனை தீர்த்துக்கட்டிய பெண்; ஆவேசம் குறையாத கிராம மக்கள்நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் கடனை தீர்க்க பக்கத்து வீட்டு 4வயது சிறுவனை கொலை செய்த இரண்டு குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் ஆவேசம் குறையாமல் கடியப்பட்டணம் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.


latest tamil news
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜான் ரிச்சர்டு. சவுதியில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். மனைவி சகாயசில்ஜா. இவர்களது மகன் ஜோகன் ரிஷி 4. இரண்டு மாத பெண் குழந்தை உள்ளது. ஜன., 21ல் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த ஜோகன் ரிஷி மாயமானான். ஊர் மக்கள் சிறுவனை தேடிய போது சிறுவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாத்திமாவும் தேடினார்.

ஜன., 22ல் பாத்திமாவின் நடவடிக்கைகளில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பாத்திமா கடன் வாங்கியிருந்த நபருக்கு ரூ.40 ஆயிரத்தை திருப்பி கொடுத்திருந்தார். இதனால் சந்தேகமடைந்து போலீஸ் உதவியுடன் மக்கள் பாத்திமா வீட்டில் பார்த்த போது அங்கு பீரோவில் ஜோகன்ரிஷி உடல் இருந்தது. ஊர் மக்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போலீசார் பொது மக்களிடம் இருந்து பாத்திமாவை மீட்டு அழைத்து சென்றனர்.


பாத்திமாவின் வாக்குமூலம்எனது கணவர் மீன்பிடி தொழில் செய்தாலும் போதிய வருமானம் இல்லாமல் கடன் அதிகரித்தது. வாணியக்குடியை சேர்ந்த பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கினேன். திருப்பிக் கொடுக்க முடியாததால் அவர் கடும் நெருக்கடி கொடுத்தார். இந்நிலையில் ஜோகன்ரிஷி பிரேஸ்லெட், செயின் அணிந்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனிடம் நைசாக பேசிவீட்டிற்கு அழைத்து சென்று நகைகளை கழற்றினேன்.

அவன் கூச்சலிட்டதால் வாயில் துணியை திணித்து, படுக்க வைத்து தலைமேல் தலையணை வைத்து அதன் மீது ஏறி அமர்ந்தேன். அவன் இறந்ததும் எனது குழந்தைகள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக துணியில் சுற்றி பீரோவில் வைத்தேன். இரவு வீட்டில் நான் பதற்றத்துடன் இருப்பதை பார்த்து கொலை செய்ததுபோல நீ பதற்றத்தில் இருக்கிறாயே என்று கணவர் சரோபின் கேட்ட போது அவரிடம் உண்மையை சொன்னேன்.

அவரது உதவியுடன் இரவு கடலில் உடலை போட்டு விடலாம் என்ற நினைத்தோம்.ஆனால் இரவிலும் ஆட்கள் தேடிக்கொண்டிருந்ததால் கடலில் போட முடியவில்லை. கடனை அடைப்பதற்காக இவ்வாறு செய்து விட்டேன், என்று போலீசில் தெரிவித்தார். சிறுவனை கொலை செய்து பீரோவில் வைத்து விட்டு அன்றே நகையை எடுத்து சென்று தனியார் வங்கியில் அடகு வைத்து கிடைத்த 40 ஆயிரம் ரூபாயை வாணியக்குடி பெண்ணுக்கு கொடுத்துஉள்ளார். போலீசார் நகையை மீட்டனர்.

குற்றத்தை மறைத்தததற்காக கணவனர் சரோபினும் கைது செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது இரண்டு குழந்தைகளை உறவினர்கள் அழைத்து சென்றனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டாலும் கடியப்பட்டணம் கிராமத்தில் மக்களின் கோபம் இன்னும் தீரவில்லை. சிறுவனின் உடல் நேற்று காலை அடக்கம் செய்யப்பட்டது. கடியப்பட்டணத்தில் தொடர்ந்து போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


டூவீலர் திருடர்கள் கைது: 13 வாகனங்கள் மீட்புகாரியாபட்டி : மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்செந்துார், கும்பகோணம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டூவீர்களை திருடி விற்பனை செய்த நான்கு பேரை காரியாபட்டியில் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 13 டூவீலர்கள், 3 மினி வேன்களை கைப்பற்றினர்.


latest tamil newsவிருதுநகர் மாவட்டம் காரியாபட்டி , நரிக்குடி பகுதியில் திருட்டு அடிக்கடி நடந்து வந்தநிலையில், அவற்றில் ஈடுபடுவோர் காரியாபட்டி பாப்பனம் வழியாக தப்பி செல்வதாக காரியாபட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து பாப்பனம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஆவாரம்குளத்தை சேர்ந்த சரணை விசாரித்ததில் டூவீலர்களை திருடி விற்று வந்தது தெரிந்தது.

விசாரணையில் காரியாபட்டி அச்சம் பட்டியை சேர்ந்த குணசேகரன், கருப்பசாமி, வீரமணி திருட்டுக்கு உடந்தையாக இருந்தது தெரிந்தது. நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரித்ததில் பல்வேறு இடங்களில் டூவீலர்கள் திருடி விற்பனை செய்தது தெரிய வர,காரியாபட்டி இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமையிலான போலீசார் தனிப்படை போலீசார் 13 டூவீலர்கள், திருட்டுக்கு பயன்படுத்திய 3 மினி வேன்களை கைப்பற்றினர்.


அல்வா'வுடன் வந்தவர்கள் 'அலேக்'காக கைதுதிருப்பூர்:''நகைக்கடன், கல்விக்கடன் ரத்து; காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம்; முதியோருக்கு, 1,500 ரூபாய் ஊக்கத்தொகை என, பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அளித்திருந்தது. இவற்றை, தமிழக அரசு நிறைவேற்றவில்லை'' எனக் கூறி இதை கண்டித்து, இந்து தேசிய கட்சியினர், வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன், மக்களுக்கு 'அல்வா' கொடுக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.latest tamil newsமாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையிலான ஏழு பேர், 'அல்வா' பாக்கெட்டுகளுடன் நேற்று, கலெக்டர் அலுவலகம் முன், வாகனத்தில் வந்திறங்கினர்.கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் காத்திருந்த தெற்கு போலீசார், ஏழு பேரையும் கைது செய்தனர். மாலை வரை, கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தங்க வைத்து, பிறகு விடுவிக்கப்பட்டனர்.


ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை; ஒருவர் கைது


பாலக்காடு : பாலக்காடு ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கில், முக்கிய நபர் கைதாகியுள்ளார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலப்புள்ளியை சேர்ந்தவர் சஞ்ஜித். இவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர். கடந்த நவ., 15ம் தேதி, மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.


latest tamil news


இவ்வழக்கில், இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கில் நேரடி தொடர்புள்ள கொழிஞ்சாம்பாறை அத்திக்கோட்டை சேர்ந்த முகமது ஹாரூன் 35, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X