வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவை 'போக்சோ' கோர்ட்டில், 240 வழக்குகள் நிலுவையில் உள்ளன; கடந்த இரு ஆண்டுகளில் தேக்கம் ஒரு மடங்கு அதிகரித்திருக்கிறது.
பெண் சிறார்கள் மீதான பாலியல் குற்றச்செயல்கள் அதிகரித்ததால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கவும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் 'போக்சோ' சட்டம் கொண்டு வரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் தாக்கலாகும் வழக்குகளை, ஓராண்டுக்குள் விரைந்து விசாரித்து, தீர்ப்பளிக்க வேண்டும் என, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது; குற்றச்சாட்டு பதிய, உரிய ஆவணங்களை போலீசார் தாக்கல் செய்யாமல் தாமதிப்பது; குற்றச்சாட்டு பதிவானாலும், அரசு தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்தாதது; வக்கீல்கள் விசாரணையை இழுத்தடிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வழக்குகள் தேக்கமடைகின்றன.அதேபோல், விசாரணை நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யும்போது, புதிய நீதிபதிகளை உடனடியாக நிரப்பாமல், நீண்டகாலமாக காலியாக வைத்திருப்பதாலும் வழக்கு நிலுவை அதிகரிக்கிறது.
நிலுவை எத்தனை
கோவையில், 2019 டிச.,-ல், 'போக்சோ' சிறப்பு கோர்ட் திறக்கப்பட்ட போது, 120 வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த இரு ஆண்டுகளில் நிலுவை வழக்குகள் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்திருக்கிறது. 2021ல், புதிதாக, 90 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 33 வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டன. கடந்தாண்டு, டிச., வரை, 240 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், இரு ஆண்டுகளாக நேரடி விசாரணை பாதிப்பு, கடந்தாண்டு ஜூனில் நீதிபதி ராதிகா இடமாற்றம் செய்யப்பட்டபின், பல மாதங்களாக அப்பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது போன்றவற்றால், நிலுவை வழக்கு அதிகரித்திருக்கிறது. புதிய நீதிபதி குலசேகரன், துரிதமாக விசாரணை நடத்தி வந்த சூழலில், கொரோனா பரவலால், நேரடி விசாரணை மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணையை துரிதபடுத்துங்க!
இத்தகைய சூழலில், 'போக்சோ' வழக்குகளில், குறிப்பிட்ட காலத்துக்குள் புலன் விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், கோவை மாவட்ட உயரதிகாரிகள் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாலியல் குறித்து புகார் பெற்ற, 24 மணி நேரத்துக்குள் எப்.ஐ.ஆர்., பதிய வேண்டும். கைது செய்யப்படும் நபரின் வாக்குமூலத்தை முறையாக பதிந்திருக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை மாதிரிகளை, வழக்குப்பதிவு செய்த ஐந்து மணி நேரத்துக்குள் சேகரிக்க வேண்டும். டி.என்.ஏ., சான்று மாதிரிகள் சேகரித்து உரிய நேரத்தில் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். குற்றப்பத்திரிக்கையை, மாவட்ட காவல் உயரதிகாரிகள் ஒப்புதலுக்குபின், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சிறாருக்கும் ஆயுள்சிறை
பாலியல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர், 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், ஆயுள் தண்டனை கிடைக்காது என்கிற தவறான கருத்து நிலவுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், சம்பவத்தின்போது மைனராக இருந்தாலும் கடும் தண்டனை விதிக்கப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, பாலியல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மைனர் ஒருவருக்கு, கடந்த டிசம்பரில், 'போக்சோ' கோர்ட் ஆயுள் சிறை விதித்திருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE