புதுடில்லி: பா.ஜ.,வை வீழ்த்த காங்கிரஸ் புனரமைக்கப்பட வேண்டும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வியூக நிபுணராக கருதப்படும் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக பல மாதங்களாக பேசப்பட்டது. இதற்கு காங்., கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர் கட்சியில் சேராமல் இருந்துள்ளார். இது தொடர்பாக தற்போது பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
மேற்குவங்க தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் 5 மாதமாக காங்கிரசில் சேர்வது குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்தது. இதற்காக மே மாதம் முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு நிமிடத்தையும் அதற்காக செலவிட்டேன்.
மற்றவர்கள் நான் காங்., உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கு எனக்கும் காங்கிரசுக்கும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. 2017ம் ஆண்டு உ.பி., தேர்தலில் காங்., கட்சிக்காக பணியாற்றியது மோசமான அனுபவமாக இருந்தது. எனவே, காங்., மீது எனக்கு சந்தேகம் இருந்தது. என் கைகள் கட்டப்பட்ட நிலையில் என்னால் பணியாற்ற முடியாது. என்னுடைய பின்புலத்தை கருதி காங்கிரசுக்கும் என் மீது 100 சதவீதம் நம்பிக்கை கிடையாது.

ஒரு குறிப்பிட்ட தேர்தலுக்காக மட்டும் நான் காங்கிரசில் இணைய விரும்பவில்லை, காங்கிரசை மீட்க செய்யவே விரும்புகிறேன். காங்., இல்லாமல் ஒரு பயனுள்ள எதிர்க்கட்சி சாத்தியமில்லை. பா.ஜ.,வை வீழ்த்த காங்கிரசை புணரமைக்கப்பட வேண்டும். காங்.,கை பழிவாங்கவே திரிணமுல் காங்., உடன் சேர்ந்ததாக பலரும் நினைக்கின்றனர். ஆனால், வலிமையான காங்.,கை பழிவாங்கும் அளவு நான் பெரியவன் கிடையாது. நான் மிகச் சிறியவன். ஜனநாயகத்தின் நலனுக்காக காங்கிரசை வலுவிழக்கவிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE