சென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், அவர்களது உடைமைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 3 பேர் கடந்த 23ம் தேதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதுடன், மீன்பிடி வலை, தொலைதொடர்பு சாதனங்கள், டீசல் கொள்ளையடித்து சென்றனர். காயமடைந்த மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பாவி மீனவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல் நடத்துவதன் மூலம் தமிழக மீனவர்களை அவர்களது பாரம்பரிய பாக் வளைகுடா மீன்பிடி கடல் பகுதிகளுக்க வர விடாமல் தடுப்பதை இலக்காக கொண்டு செயல்படுவதையே காண முடிகிறது.

இலங்கையை சார்ந்தவர்களால் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள், நமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு வாய்மூடி மவுனமாக இருத்தல் கூடாது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், அவர்களது உடைமகளை கொள்ளையடிக்கும் அல்லது சேதப்படுத்தும் செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE