வீரபாண்டி: குப்பைக்கு வைத்த தீ காற்றில் பறந்து பக்கத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் விழுந்து தீப்பற்றிக்கொண்டதால், இரண்டு ஏக்கர் கரும்பு எரிந்து சாம்பலானது. சேலம் இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால்,72. இவர் இளம்பிள்ளை சந்தைப்பேட்டை ஏரி அருகே உள்ள நிலத்தில் மூன்று ஏக்கருக்கு கரும்பு பயிரிட்டுள்ளார். அறுவடைக்கு தயாரான நிலையில், நேற்று மதியம், 12:30 மணியளவில் கரும்பு தோட்டத்தில் இருந்து கரும்புகை கிளம்பி தீப்பற்றிக்கொண்டது. காற்றில் தீ மளமளவென தோட்டம் முழுவதும் பரவியது. இதுபற்றி தகவலறிந்து வந்த ஜெயபால் உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தார். சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தீயை அணைத்தனர். இருந்தும் இரண்டு ஏக்கர் கரும்புகள் எரிந்து சாம்பலாகிவிட்டது. ஜெயபால் கூறுகையில், ''சந்தைப்பேட்டை ஏரியில் கொட்டப்படும் குப்பை கழிவுகள் தீ வைத்து எரிக்கின்றனர். அதிலிருந்து காற்றில் பறந்து வந்த தீ அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கரும்பு சோகைகள் மீது விழுந்து தீப்பிடித்துக்கொண்டது. ஏரியில் குப்பையை கொட்டி எரிப்பதால் இது போன்ற விபத்து அடிக்கடி நடக்கிறது. பெரிய அசம்பாவிதம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கழிவுகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்,'' என்றார். கரும்பு தோட்டம் கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்ததால், பெருமாகவுண்டம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE