வேலுார்: செம்மரம் வெட்ட தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் ஏஜெண்ட்டுக்களை பிடிக்க ஆந்திரா மாநில தனிப்படையினர் வேலுாரில் முகாமிட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலம், நெல்லுார் மாவட்டம், சில்லக்கூறு புத்தானம் வனப்பகுதியில், அம்மாநில போலீசார் கடந்த 23 ம் தேதி நடத்திய சோதனையில், செம்மரம் வெட்டிய தமிழகத்தை சேர்ந்த 58 பேரை கைது செய்து 50 லட்சம் மதிப்பிலான 45 செம்மரக்கட்டைகள், 24 கோடாரிகளை பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேலுார் மாவட்டம், அமிர்தி, ஒடுக்கத்துார், ஊசூர், சந்தமேடு, அல்லேரி மலையை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்களை, வேலுார், அணைக்கட்டை சேர்ந்த சில செம்மரம் கட்டை ஏஜெண்ட்டுகள் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து செம்மரம் ஏஜெண்டுக்களை பிடிக்க நெல்லுார் ஏ.எஸ்.பி., ரத்தினம் தலைமையில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு ஏஜெண்ட்டுக்களை பிடிக்க வேலுார், அணைக்கட்டு, ஒடுக்கத்துார் பகுதிகளில் இன்று முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE