வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வெளிநாட்டில் இருந்து 6,000 தன்னார்வ நிறுவனங்கள் நிதியுதவி பெறுவதற்கான உரிமங்களை மத்திய அரசு புதுப்பிக்க மறுத்ததை எதிர்த்து அமெரிக்காவைச் சேர்ந்த 'குளோபல் பீஸ் இனிஷியேட்டிவ்' நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட தொண்டு நிறுவனம் 'குளோபல் பீஸ் இனிஷியேட்டிவ்'. இவ்வமைப்பு, வன்முறை மற்றும் உலக மோதல்களை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக கூறுகிறது. இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், '6,000 தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான உரிமங்களை மத்திய அரசு புதுப்பிக்கவில்லை. நாடு மூன்றாவது அலை நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடி வரும் வேளையில், உரிமங்களை ரத்து செய்வது கோவிட் நிவாரண முயற்சிகளில் விளைவை ஏற்படுத்தும். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதுவரை லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு உதவியுள்ளன.' என கூறினர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்ட ஜெனரல் துஷார் மேத்தா, 'உரிமம் புதுப்பித்தலுக்காக விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ஏற்கனவே நீட்டிப்பு பெற்றுள்ளன. இந்த தொண்டு நிறுவனம் அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ளது. இந்த மனுவிற்கான நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ தவறாக உள்ளது.' என்றார். மேலும் உரிமம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்த 11,594 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஏற்கனவே உரிமம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான கோப்புகளை சமர்ப்பித்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்விஷயத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதிகாரிகளிடம் முறையிடலாம் என கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE