புதுடில்லி :அசம்பாவிதங்களை தவிர்க்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளின் போஸ்டர்களை, டில்லியில் பட இடங்களில் போலீசார் ஒட்டியுள்ளனர்.நாட்டில் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் டில்லி உட்பட முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிஉள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லி எல்லைகளில் தீவிர சோதனைக்கு பின்பே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் டில்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளின் போஸ்டர்களை போலீசார் ஒட்டினர். இதே போன்று பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் ஒட்டியுள்ளனர்.
இது பற்றி போலீசார் கூறியதாவது:டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக தேடப்படும் சிலர், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளனர்.அவர்களை வைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதனால் தான் சந்தேகத்துக்குரிய பயங்கரவாதிகளின் படங்களை பொது இடங்களில் ஒட்டியுள்ளோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE