சென்னை :ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் அண்ணாதுரை மற்றும் போக்குவரத்து போலீசாரை பாராட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சான்றிதழ் வழங்கினார்.ஈஞ்சம்பாக்கம், பெரியார் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 38. இவர், 12 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்; பிளஸ் 2 படித்துள்ளார்.
ஆங்கிலத்தில் பேசி அசத்தக்கூடியவர்.அண்ணாதுரையின் ஆட்டோவில் ஒரு முறை பயணித்தால், மனம் மறுபடியும் அவரது ஆட்டோவில் செல்லவே விரும்பும்.சீருடை அணியாமல் ஆட்டோவை இயக்கவே மாட்டார். பயணியரின் வசதிக்காக, ஆட்டோவில் இலவச 'வைபை' வசதி, சிறிய அளவிலான 'பிரிஜ்' வைத்துள்ளார்.குழந்தைகளுக்காக 'சாக்லெட், சிப்ஸ் பாக்கெட்டுகள்' வைத்துள்ளார். இவரது ஆட்டோவில், குடைகள் கட்டாயம் இருக்கும். மழைக்காலத்தில் வீடு மற்றும் அலுவலகத்திற்குள், பயணியர் நனையாமல் செல்ல, குடைகளை கொடுத்து உதவி செய்வார். இவரது ஆட்டோவில், 'ஸ்வைப்பிங்' இயந்திரம் உள்ளது. 'லேப்டாப், டேப்லட்' வைத்துள்ளார்.
படம் பார்த்தபடி பயணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். மேலும், நாளிதழ்கள், பருவ இதழ்கள், இலக்கிய நுால்களை வைத்துள்ளார்.கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் துாய்மை பணியாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் என, முன் களப்பணியாளர்களிடம் கட்டணம் வாங்க மாட்டார். குழந்தைகள், ஆசிரியர்கள், கர்ப்பிணியருக்கு எப்போதும் கட்டணம் கிடையாது.ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் அண்ணா துரை பற்றி அறிந்த சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், வேப்பேரியில் உள்ள தன் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.முழு ஊரடங்கு நாளன்று, சென்ட்ரல் ரயில் நிலையத்தில்'ப்ரீபெய்டு' ஆட்டோ சங்க நிர்வாகிகள் அதிக கட்டணம் வசூலித்து உள்ளனர்.தகவலறிந்த போக்குவரத்து பிரிவு ஏட்டு சரவணன், ஆட்டோ ஓட்டுனர்களை எச்சரித்ததுடன், உரிய கட்டணத்தை செலுத்தி பாதுகாப்பாக பயணியர் செல்ல ஏற்பாடு செய்தார்.எழும்பூர் காவல் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் வில்லியம் டேனியல். அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, வாகன ஓட்டிகளிடம் ஒலி பெருக்கி வாயிலாக, தமிழிலில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வில்லியம் டேனியல் மற்றும் சரவணன் ஆகியோரையும் பாராட்டி, கமிஷனர் சான்றிதழ் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE