புதுடில்லி:உத்தர பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்., மூத்த தலைவரான ஆர்.பி.என்.சிங், 57, கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.
மாற்றுக் கட்சி
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் பல கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர்.
மூத்த தலைவரான ஆர்.பி.என். சிங், காங்., கட்சியில் இருந்து நேற்று விலகினார். பின் டில்லியில் உள்ள பா.ஜ., அலுவலகத்துக்கு சென்ற அவர், பா.ஜ., வில் இணைந்தார். அவர் கூறியுள்ளதாவது:அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயம் துவங்க உள்ளேன். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்காக பா.ஜ.,வில் இணைந்து செயல்பட முடிவு செய்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
உத்தர பிரதேசத்தின் பத்ரவ்னா தொகுதியில் பா.ஜ.,வில் இருந்து விலகி, சமாஜ்வாதியில் இணைந்துள்ள சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு எதிராக, சிங்கை களமிறக்க காங்., தலைமை திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
தன்னம்பிக்கை
ஏற்கனவே உ.பி.,யைச் சேர்ந்த ஜிதின் பிரசாதா காங்.,கிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து உள்ளார். விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆர்.பி.என்.சிங்கும் விலகிஉள்ளது, காங்.,குக்கு மிகப் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து காங்., பொதுச் செயலர் பிரியங்கா கூறுகையில், ''துணிச்சலும், தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் மட்டுமே காங்கிரசில் நீடிக்க முடியும்; கோழைகளுக்கு இங்கு இடம் இல்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE