தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த... பச்சைக்கொடி!

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை :தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. 'தேர்தலை நடத்த உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யும்படி, மாநில தேர்தல் கமிஷனுக்கு, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கும் நிலையில், அந்த தேர்தலை தள்ளி வைக்கக் கோரும் மனுவை, எங்களால் ஏற்க முடியாது' என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெளிவாக உத்தரவில்
 தமிழகம், உள்ளாட்சி தேர்தல்,பச்சைக்கொடி!

சென்னை :தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. 'தேர்தலை நடத்த உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யும்படி, மாநில தேர்தல் கமிஷனுக்கு, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கும் நிலையில், அந்த தேர்தலை தள்ளி வைக்கக் கோரும் மனுவை, எங்களால் ஏற்க முடியாது' என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெளிவாக உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மருத்துவர்கள் நக்கீரன், பாண்டியராஜ் உள்ளிட்டோர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.இம்மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கறிஞர் டி.மோகன் ஆகியோர் ஆஜராகினர்.
மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் வாதாடியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக, தமிழக அரசுடன், மாநில தேர்தல் கமிஷன் கலந்து ஆலோசிக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால், ஆயிரக்கணக்கான தெருக்கள் கட்டுப்பாடான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், ஓட்டுப் பதிவுக்கு எப்படி வெளியில் வர முடியும்; வேட்பாளர், வாக்காளர், பொது மக்கள் பார்வையில் இருந்து சூழ்நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.
பார்லிமென்ட், சட்டசபை தேர்தல்களில் ஓட்டு கேட்டு பேரணியாக சென்று விடுவர். ஆனால், உள்ளாட்சி தேர்தலில், வீடு வீடாக வேட்பாளர்கள் வருவர்.அவர்களுடன் ஆதரவாளர்கள் வருவர். வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும். பொது மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது. ஐந்து ஆண்டுகளாக தேர்தல் இல்லை. மூன்று மாதங்கள் தள்ளி போவதால் எந்த பாதிப்பும் இல்லை. இயற்கை சீற்றம், நோய் தொற்று சூழ்நிலைகளில் தேர்தலை தள்ளி வைக்கலாம். பள்ளி, கல்லுாரி, நீதிமன்றம் மூடியிருக்கும்போது, தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது?இவ்வாறு அவர்கள் வாதாடினர்.


அறிவுறுத்தல்



மாநில தேர்தல் கமிஷன் சார்பில், வழக்கறிஞர் சிவசண்முகம் ஆஜராகி, ''தேர்தல் அறிவிப்பை வெளியிட, தேர்தல் கமிஷன் தயாராக உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளோம். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றுவோம்,'' என்றார்.

அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம். மாநில தேர்தல் கமிஷனுக்கு, அவ்வப்போது அரசு தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.
இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
நான்கு மாதங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும்படி, 2021 செப்டம்பர் 27ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ல், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.நான்கு மாதங்களில் தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய, மாநில தேர்தல் கமிஷன் மனு தாக்கல் செய்யும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு முரணாக, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் போது, வைரஸ் பரவல் இல்லை என்பதால், தற்போது அது கட்டுப்படுத்தாது என கூறுவதை ஏற்க முடியாது.மனுதாரர்கள் யாரும், தேர்தலை தள்ளி வைக்கும்படி, உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை. மாநில தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.
தேர்தலை தள்ளி வைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தை, அறிவுப்பூர்வமாக மாநில தேர்தல் கமிஷன் அணுகவில்லை. மாறாக, தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான உத்தரவை, தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக, உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் நடத்த உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்ய, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் போது, தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிடும்படி மனுதாரர்கள் கோருவதை, நாங்கள் ஏற்க முடியாது.
சூழ்நிலை கருதி, வீடு வீடாக தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது, வேட்பாளருடன் மூன்று பேருக்கு மேல் வரக்கூடாது; சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என, முன்னெச்சரிக்கைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொறுப்புடன் இதை பின்பற்ற வேண்டும். ஐந்து ஆண்டுகளில் தேர்தல் நடக்கவில்லை என்பதற்காக, அதை மேலும் நீட்டிக்கலாம் என்பது அர்த்தம் அல்ல. அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை புறக்கணிக்க முடியாது. அதுவும், அரசியலமைப்பு சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட தேர்தல் கமிஷனுக்கு, அதை பின்பற்ற வேண்டிய பொறுப்பும் உள்ளது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது.
எந்த சமரசமும் இன்றி, கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை, நீதிமன்றம் கவனிக்கும்.
எனவே, தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு 10 நாட்களுக்கு பின், இந்த வழக்கை பட்டியலிட வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Bharani - singapore,சிங்கப்பூர்
26-ஜன-202203:57:24 IST Report Abuse
S. Bharani இந்த உள்ளாட்சி எந்த பயனுள்ளது. இது அடுத்த தலைமுறை ஊழல்தலைவர்களையை உருவாக்குகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X