கோவை:'கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து இருதரப்பு ஒப்பந்தத்தால், விமான சேவை இயக்கலாம்' என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதால், தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
கோவை பீளமேடு சர்வதேச விமான நிலையம், 420.33 ஏக்கர் பரப்பு கொண்டது. இதில், கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகள், 15 ஆயிரத்து, 600 சதுரடியாக இருக்கிறது. ஒரு மணி நேரத்தில், 625 பயணிகளை கையாளும் கொள்ளளவு கொண்டது. 2,990 மீட்டர் ஒரு வழி ஓடுதளத்தில், ஏ-320 ரக ஏர் பஸ் விமானங்கள் தரையிறங்க முடியும். மொத்தம், 288 விமானங்கள் வந்து செல்கின்றன.
இண்டிகோ, ஏர் இண்டியா, கோ பர்ஸ்ட், ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட விமானங்கள், பெங்களூரு, சென்னை, டில்லி, கோவா, ஐதராபாத், கோல்கட்டா, மங்களுரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்களை நேரடியாக இயக்குகின்றன. கொரோனா தொற்றுக்கு முன் கொழும்பு, சிங்கப்பூர், ஷார்ஜா போன்ற நகரங்களுக்கு நேரடி விமான போக்குவரத்து இருந்தது. தற்போது, ஷார்ஜா, சிங்கப்பூருக்கு மட்டும் இயக்கப்படுகின்றன. அதனால், 'வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து போதுமானதாக இல்லை.
கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடி விமான போக்குவரத்தை துவக்க வேண்டும்' என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு, 'கொடிசியா' கடிதம் எழுதியது. அதை பரிசீலித்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ள பதிலில், 'இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையே விமான போக்குவரத்து விமான சேவை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. தேவை அடிப்படையிலும், விமான நிலைய அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையிலும் அனுமதிக்கப்படுகின்றன.
'கோவைக்கு மற்ற நாடுகளில் இருந்து வணிக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விமானங்கள் இயக்கலாம். இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள இரு தரப்பு விமான சேவை ஒப்பந்தம் அடிப்படையில் இயக்க வாய்ப்புகள் உள்ளன' என, தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், ''கொரோனா தொற்று காலத்துக்கு பின், இரு தரப்பு விமான சேவை அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கோவையின் தொழில் வளர்ச்சிக்கும், சுற்றுலா, மருத்துவ துறைகள், தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றத்துக்கும் பெரும் பயனளிக்கும்,'' என்றார்.
இத்தகைய சூழலில், விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான, 627 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு கையகப்படுத்திக் கொடுத்தால், ஓடுதளத்தின் நீளம், 3,810 மீட்டராக அதிகரிக்கும். கோடு இ ரக விமானங்கள் வந்து செல்ல முடியும் என்பதால், தமிழக அரசின் ஒத்துழைப்பை, விமான நிலைய அதிகாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.டிசம்பரில் மட்டும் பறந்தவர்கள் 1,80,800கோவையில் இருந்து உள் நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த, 2021, டிச., 2021ல், ஒரு லட்சத்து, 80 ஆயிரத்து, 800 பேர் பயணித்துள்ளனர். இதில், சர்வதேச பயணிகள் எண்ணிக்கை 10,468 ஆக உள்ளது. உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 1,70,331. இது, 2020, டிச., மாத எண்ணிக்கையை காட்டிலும், 62 சதவீதம் அதிகம்.சரக்கு போக்குவரத்தில், டிச., மாதம் சர்வதேச அளவுக்கு, 55 மெட்ரிக் டன் கையாளப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானத்தில் சரக்குகள் அளவு, 599 டன் அளவுக்கு கையாளப்பட்டுள்ளது.கோவையில் இருந்து சென்னைக்கு அதிகமான பயணிகள் விமானத்தில் பயணிக்கின்றனர். அடுத்து, மும்பைக்கும், டில்லிக்கும் பயணிக்கின்றனர். அடுத்ததாக பெங்களூருவுக்கு பயணிக்கின்றனர். பிற நகரங்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE