புதுடில்லி : 'அடுத்த 2022 - 23ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சி அடைந்து வேகமாக முன்னேறும் நாடு என்ற சிறப்பை தக்க வைத்துக் கொள்ளும்' என, சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார நிலவரம் குறித்து மேம்படுத்தப்பட்ட புதிய அறிக்கையை, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு அக்.,ல் வெளியிட்ட உலக பொருளாதார புள்ளி விபரத்துடன் தற்போதைய அறிக்கையை ஒப்பிடும்போது, 2022 - 23ம் நிதியாண்டில் இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரம் மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு 2021 - 22ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என, அக்., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது, 0.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதேபோல இந்திய பொருளாதாரம் 2022 - 23ம் நிதியாண்டில் 9 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடு என்ற சிறப்பை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும்.
இதே காலத்தில் புதிய மதிப்பீட்டின்படி ஜப்பான் பொருளாதாரம், 3.2 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாக அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 5.2 சதவீதம் வளர்ச்சி காணும் என, முந்தைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது, 4 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
![]()
|
இதேபோல சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 5.6 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவின் கடன் வளர்ச்சி எதிர்பார்க்கும் அளவிற்கு மேம்படும். மேலும் எதிர்பார்த்ததற்கும் மேலாக நிதித் துறையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்பதால் முதலீடுகளும், நுகர்வு மற்றும் தேவைப்பாடு அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE