தமிழக நிகழ்வுகள்:
வெடிகுண்டு வழக்கு: இருவர் கைது
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு கோட்டையூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது தொடர்பான வழக்கில், அதே ஊரை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கோட்டையூர் மேற்கு காலனியில் ஜனவரி 23ல் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. அப்பகுதியில் நடத்திய சோதனையில் முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.இது தொடர்பாக கோட்டையூரை சேர்ந்த முத்தையா, 35; முருகன், 30, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
திருச்செங்கோடு : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகள் மூன்று பேரும் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் கோயக்காட்டைச் சேர்ந்தவர், விசைத்தறி அதிபர் வெங்கடாசலம், 55; மனைவி நீலாம்பாள், 50. இரு மகள்கள் உள்ளனர்.மூத்த மகள் பிரீத்தி, திருமணமாகி ராசிபுரத்தில் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை, 6:00 மணிக்கு தந்தை வெங்கடாஜலத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரமாக எடுக்கவில்லை. உறவினருக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார்.உறவினர் சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, வெங்கடாஜலம், அவரது மனைவி நீலாம்பாள் இருவரும், துாக்கு மாட்டி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.போலீசார் வந்து, வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். இளைய மகள் ஷாலினி 17, மொட்டை மாடி குளியல் அறையில், துாக்கு மாட்டி இறந்து கிடந்தார். கடன் பிரச்னையா, வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து, திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வரலாறு படித்து வைத்தியம்: போலி டாக்டர் கைது
தேவக்கோட்டை: காரைக்குடியில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சூடாமணிபுரத்தைச் சேர்ந்தவர் சேவியர், 55. தேவகோட்டை ராம் நகர் மெயின் ரோட்டில், பல ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வருகிறார். 'கிளினிக் போர்டில்' படிப்பு எதுவும் குறிப்பிடப்படாமல், அரசு பதிவு பெற்ற மருத்துவர் என்று மட்டும் இருந்தது.மாவட்ட மக்கள் நல்வாழ்வு துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் மற்றும் மருத்துவ குழுவினருக்கு சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, கிளினிக்கில் ஆய்வு நடத்தினர். அவர், ஹோமியோபதி, சித்த மருத்துவம் செய்வது தெரிந்தது.பதிவு செய்ததற்கோ, டாக்டர் படிப்பிற்கோ எந்தவித சான்றிதழ்களும் இல்லாததால், போலி டாக்டர் என தெரிந்தது.தொடர் விசாரணையில், சேவியர் முதுகலை வரலாறு படித்தவர் என்றும், பல ஆண்டுகளுக்கு முன் நாகலாந்தில் ஒரு பல்கலையில், ஹோமியோபதி படித்ததும்; கிளினிக் நடத்த இங்கு அனுமதி வாங்கவில்லை என்பதும் தெரிந்தது. சேவியரை போலீசார் கைது செய்தனர்.
'மாஜி' மனைவியை கொலை செய்த கணவர்
தேவகோட்டை: - முன்னாள் மனைவியை கொலை செய்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, கோவிலாம்பட்டியைச் சேர்ந்தவர் வீராச்சாமி, 42; மனைவி அன்னலட்சுமி, 32. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், முடிக்கரை சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருடன் அன்னலட்சுமி மானாமதுரையில் வசித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அன்னலட்சுமி, வீராசாமி விவாகரத்து பெற்றனர்.ஆயினும், குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாகவும், சொத்து தொடர்பாகவும் இருவரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், நோய் வாய்ப்பட்ட தன் தந்தை அழகப்பனை கோவிலாம்பட்டியில் உள்ள வீட்டில் விடுவதற்காக, அன்னலட்சுமி வந்தார்.அப்போது, வீராச்சாமி - அன்னலட்சுமி இடையே பிரச்னை ஏற்பட்டது. 'விவாகரத்து வாங்கிய பின் ஏன் வருகிறாய்' என மனைவி தரப்பில் கேட்டனர். வீராச்சாமி மீது புகார் கொடுக்க, அவர்கள் திருவேகம்பத்துார் போலீஸ் ஸ்டேஷன் சென்றனர். அன்னலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.அங்கு வந்த வீராச்சாமி, அன்னலட்சுமியை மண் வெட்டியால் வெட்டி கொலை செய்தார். வீராச்சாமியை போலீசார் கைது செய்தனர்.
கூரையில் துப்பாக்கி தோட்டா; பெரம்பலுார் அருகே பரபரப்பு
பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே, வீட்டு கூரையில் துப்பாக்கி தோட்டா கண்டெடுக்கப்பட்டது. பயிற்சி மையத்தில் இருந்து பாய்ந்து வந்த தோட்டாவா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரம்பலுார் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில், திருச்சி சரகத்துக்கு உட்பட்ட போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படும்.இந்த பயிற்சி மையத்தில் இருந்து, சுமார் 2 கி.மீ., துாரத்தில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணி என்பவரது வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் கூரையில், துப்பாக்கி தோட்டா ஒன்று கிடப்பதாக, நேற்று மதியம் 2:00 மணியளவில் போலீசாருக்கு தகவல் வந்தது.கூரையில் இருந்த தோட்டாவை பாடாலுார் போலீசார் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.
திருச்சி சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர், எஸ்.பி., மணி நேரில் விசாரணை நடத்தினர்.இப்பகுதியில் கல் குவாரிகள் செயல்படுவதற்கு, துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இடையூறாக இருப்பதாகவும், புதுக்கோட்டை அருகே, தோட்டா பாய்ந்து சிறுவன் உயிரிழந்ததால், அந்த பயிற்சி மையத்தை மூடியது போல், இந்த மையத்தையும் மூடுவதற்கு திட்டமிட்டு, இப்பிரச்னையை சிலர் கிளப்பி இருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரிக்கின்றனர்.
உடல் பருமனால் விரக்தி; பள்ளி மாணவி தற்கொலை
திருச்சி: உடல் பருமனால் விரக்தியடைந்த பள்ளி மாணவி, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி, கன்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஷர்மிளா. எஸ்.பி.ஐ., வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் இவர், சில ஆண்டுகளாக, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மகள் ஷிவானி, 13, தாயுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஷர்மிளா, கதவை தட்டியுள்ளார்.
மகள் திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்த போது, ஷிவானி மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார் விசாரணையில், ஷிவானி உடல் பருமனாக இருந்ததால், தாயிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஷிவானி, தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

கடன் வசூலிக்க வந்தவரின் பல் உடைத்தவருக்கு 'காப்பு'
திருமங்கலம், : வங்கி 'கிரெடிட் கார்டு' கடன் தொகையை வசூலிக்க வந்தவர் மீது தாக்குதல் நடத்தியவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
பழைய திருமங்கலம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 35. இவர், எச்.டி.எப்.சி., வங்கியின் 'கிரெடிட் கார்டு' பயன்படுத்தி, 1 லட்சம் ரூபாய்க்கு மேல், கடனுக்கு பண பரிவர்த்தனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.அதற்கான கடன் தொகையை, இரண்டு மாதமாக வங்கிக்கு செலுத்தாமல் இருந்து உள்ளார்.
கடன் தொகையை வசூலிப்பதற்கான, வங்கி சார்பில் கடன் வசூலிப்பாளராக பணிபுரியும், ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த மணிகண்டன், 25, என்பவர், நேற்று முன்தினம் விக்னேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது, அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் மற்றும் அவரது சகோதரன் கார்த்திக், ௪௫, ஆகியோர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில், மணிகண்டனுக்கு பல் உடைந்ததால், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் தொடர்பாக, மணிகண்டன், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, கார்த்திக்கை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள விக்னேஷை தேடி வருகின்றனர்.
இந்திய நிகழ்வுகள்:
கார் விபத்து: மருத்துவ மாணவர்கள் 7 பேர் பலி
வார்தா: மஹாராஷ்டிராவின் வார்தாவில் பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் உட்பட மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் ஏழு பேர் கார் விபத்தில் பலியாகினர்.
மஹாராஷ்டிராவின் வார்தா மாவட்டம் செல்சுரா கிராமம் அருகே நேற்று நள்ளிரவு 1:30 மணிக்கு வேகமாக வந்த 'மஹிந்த்ரா எக்ஸ்.யு.வி - 500' கார் பாலத்தில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் அந்த கார் அடையாளம் காண முடியாத அளவுக்கு நொறுங்கியது. விபத்தில், காரில் இருந்த ஏழு பேர் பலியாகினர். தகவல் அறிந்த போலீசார் உடல்களை மீட்டனர்.
விபத்து குறித்து போலீசார் கூறியதாவது: விபத்தில் பலியான ஏழு பேரும் வார்தாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள். அவர்களில் திரோரா தொகுதியின் பா.ஜ., - எம்.எல்.ஏ., விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேலும் ஒருவர். இவர் முதலாம் ஆண்டு மாணவர்.மற்றவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள். பலியானவர்களில் ஒருவரது பிறந்தநாள் விழாவை யவத்மால் மாவட்டத்தில் கொண்டாடி விட்டு, மருத்துவக் கல்லுாரிக்கு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பயங்கரவாதிகளின் படங்கள்: டில்லியில் ஒட்டிய போலீசார்
புதுடில்லி: நாட்டில் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் டில்லி உட்பட முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிஉள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளின் போஸ்டர்களை, டில்லியில் பட இடங்களில் போலீசார் ஒட்டியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்
ஸ்ரீநகர்: குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தபோதிலும், ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள வணிக நிறுவனத்தில் நேற்று பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வீர் ஹூசைன், போலீஸ்காரர் முகமது ஷபி, அவரது மனைவி தன்வீரா மற்றும் அஸ்மத் என்ற பெண் ஆகிய நான்கு பேர் காயம் அடைந்தனர். நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாக்குதல்நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE