வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை மாநகராட்சியில், வடகிழக்கு பருவ மழையின் போது அதிக பாதிப்புக்கு உள்ளான நான்கு மண்டலங்களில், புதிதாக வடிகால்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் 187.55 கோடி ரூபாய் செலவில், 55 கி.மீ., நீளத்திற்கு வடிகால் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களே கால்வாய் வடிவமைப்பை தயார் செய்து, அதற்கு சென்னை ஐ.ஐ.டி., நிபுணர்களிடம் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், கடந்த ஆண்டு நவம்பரில் வரலாறு காணாத மழைப்பொழிவால், மாநகர் முழுதும் வெள்ளக்காடானது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் என்.எஸ்.சி., போஸ் சாலை, இளைய முதலி தெரு, முத்தமிழ் நகர், திருவள்ளூர் நகர், கோல்டன் காம்ப்ளக்ஸ், முல்லை நகர், கல்யாணபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கியது.

அதேபோல், திரு.வி.க.நகர் மண்டலத்தில் புளியந்தோப்பு, சூளை, தட்டங்குளம், கொளத்துார், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளிலும், தேனாம்பேட்டை மண்டலத்தில், சீத்தம்மாள் காலனி, ஜி.என்.செட்டி சாலை, பசூல்லா சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் அதீத வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் மாம்பலம், தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி, வடிய பல நாட்கள் ஆனது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னையில் மழை வெள்ள பாதிப்பு தடுப்பு குறித்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, சென்னையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, இடைக்கால அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இதைதொடர்ந்து, பருவமழையின் போது அதிகம் பாதிக்கப்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக 187 கோடி ரூபாயில் பணிகளை முடிக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி, நான்கு மண்டலங்களில், 11 பேக்கேஜாக, 55 கி.மீ., நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த கால்வாய்கள் அமைக்க 187.55 கோடி ரூபாய் ஒதுக்கி, ஒப்பம் கோரப்பட்டுள்ளது. கால்வாய் வடிவமைப்பை, ஒப்பந்தம் கோரும் நிறுவனங்களே வடிவமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்ததார்களின் வடிவமைப்புக்கு, சென்னை ஐ.ஐ.டி.,யின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கோரும் நிறுவனங்கள், தங்கள் பணியில், 1 சதவீதத்தை முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். இதற்காக, https://tntenders.gov.in என்ற இணையதளத்தில், பிப்ரவரி 28ம் தேதி மாலை 3:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவை, மார்ச் 1ம் தேதி விண்ணப்பித்த ஒப்பந்ததாரர்களின் முன்னிலையில் திறக்கப்படும்.ஒப்பந்தம் அளிக்கப்பட்டவுடன், வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக, மழைநீர் வடிகால் அமைத்தல், சீரமைத்தல் போன்ற பணிகள் முடிக்க திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE