
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், தி.மு.க., அரசு ஆட்சி காலத்தில், 2010ல் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு, குடிசை வீடுகளை ஊரக வளர்ச்சி துறையினர் கணக்கெடுத்தனர்.கடந்த 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை, அரசு முடக்கியது.
அதற்கு பதிலாக, பசுமை வீடு வழங்கும் திட்டத்தை, அ.தி.மு.க., அரசு அறிவித்து, பசுமை வீடுகள் கட்டுவதற்கு, பணி ஆணை வழங்கியது.10 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் முடங்கி இருந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வராக பதவி ஏற்றதும், தி.மு.க., ஆட்சி காலத்தில் முடக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு புத்துயிர் அளித்து வருகிறார்.
அந்த வரிசையில், 'குடிசை இல்லாத தமிழகமாக உருவாக்குவோம்' என, மறைந்த முதல்வர் கருணாநிதி அறிவித்த கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு, புத்துயிர் அளித்துள்ளார்.கடந்த 2010ல் கணக்கெடுக்கப்பட்ட குடிசை வீடுகளை வைத்து, நடப்பாண்டு மீண்டும் கணக்கெடுக்க உத்தரவிட்டு உள்ளார்.

மகளிர் குழுவினர், ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கணக்கெடுத்து வருகின்றனர்.இந்த கணக்கெடுப்பில் குடும்ப தலைவர், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, இனம், வீட்டின் வகைப்பாடு, நிலம் வகைப்பாடு மற்றும் ஆடு, மாடுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட 63 விதமான கேள்விகளுக்கு பதில் பெற்று வருகின்றனர்.
இத்தகவலை, மொபைல் செயலி மூலமாக கணக்கெடுப்பு குழுவினர் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக, அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை பதிவு எண்ணுடன், செயலியில் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்களில் 28 ஆயிரத்து 282 குடும்பம், குடிசைகளில் வசித்ததாக கணக்கெடுப்பு விபரம் உள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 ஊராட்சிகளில், 2,158 குக்கிராமங்களில், 56 ஆயிரத்து 856 குடிசைகள் இருப்பதாக விபரம் உள்ளது. இந்த குடிசைகளுக்கு ஊரக வளர்ச்சி துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். குடிசை வீடு மாறியிருக்கிறதா, புதிதாக ஏதேனும் குடிசை வீடுகள் வந்துள்ளனவா என, கணக்கெடுத்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், தேர்வான பயனாளிகளின் பெயர் மற்றும் பிற விபரங்கள் ஊரக வளர்ச்சி இணைய தளத்தில், விபரம் சேகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பயனாளிகள், அரசு வீடு கட்டும் திட்டத்தில் ஏதேனும் பயன்பெற்றனரா என, முறையாக கணக்கெடுத்து வருகிறோம்.
பதினொரு நாள் கணக்கெடுப்புக்கு பின், அறிக்கையை, ஒரு மொபைல் செயலியில் அரசுக்கு சமர்ப்பித்த பின், தகுதி வாய்ந்த வீடு கட்டும் பயனாளிகளின் பெயர், பட்டியலில் வெளிவரும்.எந்த திட்டத்திலும் பயன்பெறாத நபர்களுக்கு, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையான குடிசை பயனாளிகளாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பசுமை வீடு திட்டம் முடக்கம்?
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், பசுமை வீடு வழங்கும் திட்டத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்.இந்த திட்டத்தின் வாயிலாக, பல லட்சம் குடும்பத்தினர் வீடு கட்டி பயன் அடைந்துள்ளனர். 10 ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 8,520; காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,841 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
இத்திட்டம், தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்ற பின் முடக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் வீடு கட்டி வரும் பயனாளிகளுக்கு, வீடு கட்டியதற்கான 'பில்' கிடைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதை எந்த அதிகாரிகளும் தெளிவுபடுத்தவும் இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE