சத்தியமங்கலம்: புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்தியதற்கு, உலக அளவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு, டி.எக்ஸ்.,2 விருது வழங்கப்பட்டுள்ளது. புலிகளுக்கான, 2022 லூனார் ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, அதன் துவக்கத்தில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வனத்தில் புலிகளின் எண்ணிக்கையை, இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று, 2010ல் முடிவு செய்து, 2022க்குள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்றைய நிலவரப்படி, 2010ல் இருந்ததை விட, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இரண்டு மடங்கு புலிகள் வசிக்கின்றன. திட்டமிட்டபடி எண்ணிக்கையை அதிகரித்ததற்காக, டி.எக்ஸ்.2 விருது அளிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2013ல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட சத்தியமங்கலத்தில், 80 புலிகள் தற்போது உள்ளன. இதேபோல், 2010 முதல், காட்டு புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகரித்ததற்காக, நேபாளம் நாட்டின் பார்டியா தேசியப்பூங்காவுக்கும், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு இனத்தை மட்டும் பாதுகாக்க அமைக்கப்பட்ட இலக்குகளில் டி.எக்ஸ்.,2 இலக்குதான் மிக தீவிரமான ஒன்றாகும். வரும் செப்., மாதம் விளாடிவோஸ்டாக்கில் நடக்கும் புலிகளுக்கான இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாட்டில், புலிகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான புதிய குறிக்கோள் அமைக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE