சேலம்: பொதுப்பட்டியலில் உள்ள பெயரை, அரசு ஒதுக்கீடு பட்டியலுக்கு மாற்றி மருத்துவம் படிக்க உதவுமாறு, முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவி மனு அளித்தார்.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம், கரிக்காபட்டியை சேர்ந்த மாணவி கஸ்தூரி, 19. இவர், தந்தை பழனிசாமியுடன், நேற்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்தார். பின், கஸ்தூரி கூறியதாவது: ஒன்று முதல், பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றேன். 'நீட்' தேர்வில், 252 மதிப்பெண் கிடைத்தது. அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீடுபடி, எம்.பி.சி., பிரிவில், 230 மதிப்பெண் பெற்றாலே தரவரிசை பட்டியலில் அரசு ஒதுக்கீட்டில் நான் இடம் பெற வேண்டும். ஆனால், பொது பட்டியலில் என் பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால், அரசின் சலுகை கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பு பறிபோய் விட்டது. பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், மருத்துவம் படிக்க லட்சக்கணக்கில் பணம் செலவாகும். என் பெற்றோர் தறித்தொழிலாளிகள் என்பதால், அதிக பணம் கொடுத்து படிக்க முடியாத நிலை உள்ளது. குளறுபடிகளை களைந்து, பொதுப்பட்டியலில் உள்ள என் பெயரை, அரசு ஒதுக்கீடு பட்டியலுக்கு மாற்றி மருத்துவம் படிக்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், ''மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட, 9 மாணவியர் வழங்கிய புகார் மனு விபரம், அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. அதனால், உரிய நடவடிக்கை இருக்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE