கொடுமுடி: துணை பி.டி.ஓ.,வுக்கு கொலை மிரட்டல் விடுத்த, யூனியன் கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை கோரி, கொடுமுடி யூனியன் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி யூனியன், தி.மு.க., வசம் உள்ளது. மொத்தம் ஐந்து கவுன்சிலர்கள் உள்ளனர். சேர்மேனாக லட்சுமி ராஜேந்திரன் உள்ளார். யூனியன் கவுன்சிலர்களான டி.பழனிசாமி (தி.மு.க.,), எ.பழனிசாமி (கொ.ம.தே.க.,), பரமசிவம் (அ.தி.மு.க.,), கவுன்சிலர் வளர்மதியின் (அ.ம.மு.க.,) கணவர் சின்னசாமி உள்ளிட்டோர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர். புதிதாக வாங்கப்பட்ட பிரின்டர் தொடர்பாக, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கிருஷ்ணனிடம், தகாத வார்த்தை பேசியுள்ளனர். அப்போது கொலை மிரட்டல் விடுத்து, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இந்த சம்பவம், ஈரோடு மாவட்ட அளவில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், கொடுமுடி போலீசில் புகார் தந்தனர். இந்நிலையில், வட்டார தலைவர் ரவி தலைமையிலான ஊழியர்கள், அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநில துணை தலைவர் பாஸ்கர் பாபு, மாவட்ட மைய செயலாளர் கிருஷ்ணசாமி, துண தலைவர்கள் சின்னசாமி, லோகநாதன் உள்ளிட்டோர் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், 10 ஊராட்சி செயலாளர், பணியாளர் உள்பட, 40க்கும் மேற்பட்டோர், கவுன்சிலர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்துறை கூடுதல் எஸ்.பி., கவுதம் கோயல், கொடுமுடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், ஏற்கனவே போலீசில் அவர்கள் கொடுத்த புகாருக்கு, அதற்கான ரசீது (சி.எஸ்.ஆர்.,) வழங்கினர். இதை பெற்றுக்கொண்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் கொடுமுடி யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு, பதற்றம் ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE