சேந்தமங்கலம்: கொரோனா விதிமுறைகளை மீறி கூடிய புதன் சந்தையில், 3 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த புதன் சந்தையில், நேற்று, செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடி வர்த்தகம் நடந்தது. இச்சந்தை, திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை, 3:00 மணி வரை நடந்தது. இங்கு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்தும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வர்த்தகம் செய்தனர். நேற்று கூடிய மாட்டுச்சந்தையில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பசு, எருமை, கன்றுகள் உள்ளிட்ட அனைத்து வகையான மாடுகளும் குறைந்தளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கறவை மாடுகள் வரத்து குறைவாகவே காணப்பட்டன. இருந்தும்,3 கோடி ரூபாய்க்கு வாத்தகம் நடந்தது. மேலும், கேரளா வியாபாரிகள் குறைவாகவே மாட்டு சந்தைக்கு வந்திருந்தனர். மாடுகளின் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்து விற்கப்பட்டது. இறைச்சி மாடு, 24 ஆயிரம் ரூபாய்க்கும், கன்று, 9,000 ரூபாய்க்கும், எருமை மாடு, 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில், விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், புதன் சந்தை கூடியது. இதனால், கொரோனா தொற்று, அதிகளவில் இப்பகுதியில் பரவ வாய்ப்புள்ளது. ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE