நாமக்கல்: ''தி.மு.க., வினர் படிப்படியாக மதுக் கடைகளை குறைப்போம் என்று சொன்னார்கள். இப்போது, படிப்படியாக டாஸ்மாக் கடைகளை, பார்களை அதிகப்படுத்தி இருக்கின்றனர் , '' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி கூறினார்.
இது குறித்து, நாமக்கல்லில் அவர் கூறியதாவது: டாஸ்மாக் கடை மற்றும் பாரை பொருத்தவரை, பழனிசாமி முதல்வராக இருக்கின்ற போது, அடுத்த முறை வரும்போது, பாரை முழுமையாக மூடுவதாக சொன்னார். ஏற்கனவே, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, படிப்படியாக குறைப்பதாக சொல்லி, 2016 மே, 23ல் முதல்வராக பதவியேற்றபோது, 500 கடைகளை மூடினார். அதேபோல், பழனிசாமியும் முதல்வராக பதவியேற்ற போது, 500 கடைகளை குறைத்தார். தி.மு.க., வினர் படிப்படியாக மதுக் கடைகளை குறைப்போம் என்று சொன்னார்கள். இப்போது, படிப்படியாக டாஸ்மாக் கடைகளை, பார்களை அதிகப்படுத்தி இருக்கின்றனர். உதாரணமாக, பள்ளிபாளையம் நகராட்சியில், 10 ஆண்டுகளாக, டாஸ்மாக் கடைகள் இல்லாமல் இருந்தது. இப்போது, இரண்டு கடைகளை திறந்துள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்தவர்களே கடைகள் வரக்கூடாது என்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் கலெக்டரை அணுகி, இதுபோன்ற கடைகளை அதிகப்படுத்தக்கூடாது என கேட்டனர். ஆனால், கலெக்டரும் சரி, மற்றவர்களும் சரி, ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து, மதுக்கடைகளை அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
'மக்களை கண்டு தி.மு.க.,வுக்கு பயம்': முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறுகையில், ''வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும். அதற்கு பயந்து கொண்டுதான், இப்போது, தி.மு.க.,வை சேர்ந்தவர்களே உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர். யார் எங்கள் ஆட்சியில், தேர்தல் நடத்த வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்களோ அவரே இப்ப வந்து, நான்கு மாதம் தள்ளிப்போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மக்களை கண்டு அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. எட்டு மாதகாலத்திலேயே, இந்த ஆட்சி மீது வெறுப்பு வந்ததற்கு இது ஒரு உதாரணம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE