இப்படியா 'ஐஸ்' வைப்பது!
டி.தேவா, சங்கர் நகர், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராஜாஜி, ராமசாமி ரெட்டியார், குமாரசாமி, காமராஜர் மற்றும் பக்தவத்சலம் ஆகியோர் முதல்வர்களாக இருந்த போது, 'அரசு உத்தரவுகள்' மட்டுமே வந்து கொண்டிருந்தன.
'மாண்புமிகு தமிழக முதல்வர் காமராஜர் உத்தரவிற்கிணங்க...' என்றோ, 'மாண்புமிகு தமிழக முதல்வர் பக்தவத்சலம் வழிகாட்டுதலின்படி...' என்றோ, எந்த அரசு உத்தரவும் வெளியானதாக நமக்கு நினைவில்லை.
தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, தன் ஆட்சி காலத்தில், 'கழக அரசு' என்று சொல்ல துவங்கினார்.அதற்கு பின் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., ஒரு படி மேலே சென்று, 'அண்ணாதுரையின் அரசு' என்று சொல்ல ஆரம்பித்தார்.அவருக்கு பின் முதல்வரான ஜெயலலிதா, பல படி மேலே சென்று, 'என்னுடைய அரசு' என்றார்.
பன்னீர் செல்வமும், பழனிசாமியும், 'மாண்புமிகு அம்மாவின் வழிகாட்டுதலின் படி...' என்று, அரசு உத்தரவுகளை வெளியிட்டனர்.
இதை எல்லாம், மக்கள் சகித்து கொள்ள பழகி விட்டனர்.தற்போது, தி.மு.க., ஆட்சி கட்டிலில் அமர்ந்து கோலோச்ச துவங்கி, எட்டு மாதங்கள் ஆகிறது.தொட்டில் பழக்கம் சும்மா இருக்குமா?அமைச்சர்கள் அத்தனை பேரும், 'மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி...' என்ற வரிகளை சேர்க்காமல், எந்த அரசு உத்தரவுகளையும் வெளியிடுவதில்லை.
இதை ஒரு கொள்கையாகவே, அவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை ஆராய்ந்தால், ஒரு விஷயம் விளங்கும்.அதாவது முதல்வர் ஸ்டாலினை தவிர, ஏனைய அமைச்சர்கள் அனைவருக்கும் எதையும் சுயமாக சிந்திக்க தெரியாது. முதல்வர் ஸ்டாலின், 'நில்' என்றால் நிற்கவும், 'சிட்' என்றால் உட்காரவும் மட்டுமே தெரியும்.
அவர்கள் தங்களது அன்றாட கடமையை கூட, முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தான் செய்கின்றனரோ?பொங்கல் தொகுப்பில் நடந்த குளறுபடியும், குடியரசு தின விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளும் முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி தானோ?
'ஐஸ்' வைப்பதற்கும் ஒரு அளவில்லையா? இப்படியா ஜன்னி ஜுரம் வரும்படி ஐஸ் வைப்பது?
இலவசம் மீது மோகம் குறைந்துள்ளது!
வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொங்கலை முன்னிட்டு, 2.16 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு, 1,297 கோடி ரூபாய் மதிப்பில், 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை, தமிழக அரசு வழங்கியது.
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, அதன் மீது சர்ச்சை ஓயாமல் இருக்கிறது.பொருட்களில் தரமில்லை, வெளிமாநிலங்களில் ஏன் கொள்முதல் செய்யப்பட்டது, பாக்கெட்டுகளில் ஹிந்தி எழுத்து உள்ளது, 500 கோடி ரூபாய் ஊழல், அனைத்து பொருட்களும் பலருக்கு கிடைக்கவில்லை... இப்படியாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகள் தெரிவித்து
வருகின்றன.'ஊழல் நடைபெறவில்லை; தரமான பொருட்களை தான் கொடுத்துள்ளோம்' என, தி.மு.க., அரசும் தெரிவித்து வருகிறது.இப்போது, பரிசு பொருட்களின் தரம் குறைந்துள்ளதா என, முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் வேறு நடத்தியுள்ளார்.'தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கப்பணம் வழங்கும்' என்று, மக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்; அது ஏமாற்றமாக முடிந்தது.
'இத்தனை பொருட்கள் கொடுத்ததற்கு பதிலாக, பணமாக கொடுத்திருக்கலாம்' என்றும் மக்கள் முணுமுணுக்கின்றனர்.அரசு வழங்கும் இலவச பொருட்களின் மீது, மக்களுக்கு மோகம் குறைந்து விட்டது. இப்போது பணத்தின் மீது கவனம் செலுத்துகின்றனர்.தமிழக அரசு இலவசமாக வழங்கிய மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, 'டிவி' உள்ளிட்ட பொருட்கள் இன்று எத்தனை பேர் பயன்படுத்தி வருகின்றனர்? அந்த பொருட்களின் ஆயுள் காலமும் மிக குறைவு.எதிர்வரும் காலங்களில், பொங்கலுக்கு ரொக்க பணத்தை கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.முதல்வர் ஸ்டாலின் அதை செய்வாரா?
தமிழக அரசு செவி சாய்க்குமா?
ஜி.சூர்யநாராயணன், விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விழுப்புரம் நகரின் மத்தியில் காமராஜர் வீதியும், திரு.வி.க., வீதியும் இணையும் முச்சந்தியில், 40 ஆண்டுகளுக்கு முன் ஈ.வெ.ரா., சிலை நிறுவப்பட்டது.கடந்த வியாழன் அன்று, விடிவதற்கு முன், அந்த சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்தது. உடனே, ஈ.வெ.ரா.,வின், 'முரட்டு பக்தர்கள்' தனித்தனி குழுவாக ஆங்காங்கே கூடி, ஆலோசித்தனர்; மறியல் போராட்டத்தில் இறங்கினர். இந்த தகவல் பரவியதும், விழுப்புரம் மக்களுக்கு பயம்
தொற்றிக் கொண்டது.பொதுவாக, ஈ.வெ.ரா., தொண்டர்கள், முரட்டுத்தனமாக நடந்து கொள்வர்; அவர்களிடம் அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது.மனிதருக்கு எது ஆனாலும் பரவாயில்லை; ஆனால், ஈ.வெ.ரா.,வின் சிலைக்கு ஏதாவது ஒன்று என்றால், அவர்களால் தாங்க முடியாது.
ஒரு முறை, எங்கோ ஓரிடத்தில், ஈ.வெ.ரா.,வின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, சென்னையில் கோவில் வாசலில் தர்பை விற்று பிழைத்து வந்த நபர் வெட்டப்பட்டார்.விழுப்புரத்தில் ஈ.வெ.ரா., சிலை சேதமானதற்கு எத்தனை உயிர்கள் பலியாக போகிறதோ என, அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தோம்.இந்நிலையில், 'சிசிடிவி' கேமரா உண்மையை வெளிச்சமிட்டு காட்டி, பொதுமக்களின் மனதில் பால் வார்த்தது.
அதாவது, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கனரக லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக மோதியதில், அந்த சிலை சேதமடைந்துள்ளது.அந்த லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈ.வெ.ரா.,வின்பக்தர்கள் கலைந்து சென்றனர்.அந்த 'சிசிடிவி' கேமரா மட்டும் இல்லையென்றால், என்ன நடந்திருக்கும்?நினைத்து பார்க்கவே, நெஞ்சம் பதைபதைக்கிறது.இடிந்த சிலையை, மீண்டும் நிறுவ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.ஆனால் சிலையை, முச்சந்தியில் நிறுத்த வேண்டாமே!ஊரில் ஒதுக்குபுறத்தில், போக்குவரத்து பாதிக்காத இடத்தில் நிறுவினால், பல பிரச்னைகளை
தவிர்க்கலாம்.தமிழக அரசு செவி சாய்க்குமா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE