பதவி பறிப்பில் இருந்துதப்பும் அமைச்சர்கள்?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடித்ததும், மார்ச் 20 முதல் 25ம் தேதிக்குள், தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஆலோசனை நடந்து வருகிறது.பட்ஜெட் தாக்கல் செய்த பின், மூன்று நாட்கள் பொது விவாதம் நடத்தி, ஏப்., 1 முதல் 25வரை, துறை ரீதியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படும். சட்டசபை கூட்டத் தொடரை முடிக்க, ஆளுங்கட்சி தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஏப்., 25க்கு பின், தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாக முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து, தொகுதி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி தலைமை நிலைய பேச்சாளர்கள், பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
தி.மு.க., அரசின் முதலாம் ஆண்டு சாதனையை, மே 7ல் சிறப்பாக கொண்டாட ஆளுங்கட்சி மேலிடம் விவாதித்துள்ளதாம். எனவே, மே மாதம் வரை தங்கள் பதவிக்கு ஆபத்து இல்லை என, பதவி பறிப்பு கலக்கத்தில் இருந்த அமைச்சர்கள் சிலர் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
கட்சி எப்படி வளரும்?விரக்தியில் எதிர்க்கட்சி!
அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2,500 ரூபாய் கொடுத்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் 5,000 ரூபாய் வழங்கும்படி கேட்டார். தற்போது ஸ்டாலின் முதல்வராக இருந்தும், பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் தராதது, மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.பரிசு தொகுப்பில் அறிவித்த பொருட்கள் அனைத்தும் கிடைக்காததும், கிடைத்த பொருட்களும் கலப்படமாக இருந்ததும், மக்களிடம் அரசுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தி உள்ளது.
இதை பயன்படுத்த வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அமைதி காப்பது, அக் கட்சி நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பொருட்கள் தரமில்லை என குற்றஞ்சாட்டிய அ.தி.மு.க., தொண்டர் மீது போலீசார் வழக்கு தொடர, அவரது மகன் தீக்குளித்து இறந்தார். இதை கூட கட்சி தலைமை கண்டும் காணாமல், அறிக்கை மட்டும் வெளியிட்டு அமைதியாக இருந்து விட்டதே என, கட்சியினர் விரக்தியில் பேசுகின்றனர்.
'கட்சியை வழிநடத்த வேண்டியவர்கள், சொந்த மாவட்டத்தில் கட்சி நடத்திக் கொண்டிருந்தால், மற்ற மாவட்டங்களில் கட்சி எப்படி வளரும்?' என, இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் வெளிப்படையாக பேச துவங்கி விட்டனர். விரைவில் கட்சியில் பஞ்சாயத்து கூட்டப்படலாம் என்கிறது அ.தி.மு.க., வட்டாரம்.
நயினார் பேச்சால்பா.ஜ.,வில் சலசலப்பு
'சட்டசபையில் ஆண்மையோடு பேசக்கூடிய அ.தி.மு.க.,வை பார்க்க முடியவில்லை' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு, அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுகள் பங்கீடு தொடர்பாக, அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., பேச்சு துவங்க இருக்கிறது. இந்த சூழலில் நயினார் நாகேந்திரனின் பேச்சு, பா.ஜ.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கோபமடைந்து உள்ள அ.தி.மு.க., நகர்ப்புற வார்டுகள் பங்கீட்டில் கறாராக நடந்து கொள்ளுமோ என்று பா.ஜ.,வினர் கவலை அடைந்துள்ளனர்.
நயினார் நாகேந்திரன் பேச்சு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோரிடம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் புகார் தெரிவித்து உள்ளனர்.இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகம் ஆகியோரிடம், மேலிட தலைவர்கள் விளக்கம் கேட்டுள்ளனர். அதன் பின்னரே, பழனிசாமியிடம் அண்ணாமலை பேசியிருக்கிறார். 'நயினார் பேச்சுக்கும், பா.ஜ.,வுக்கும் சம்பந்தம் இல்லை' என தெரிவித்து இருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE