தலைநகர் டில்லியில் குடியரசு தின விழா...கோலாகலம்!75 போர் விமானங்கள் வானில் சாகசம்| Dinamalar

தலைநகர் டில்லியில் குடியரசு தின விழா...கோலாகலம்!75 போர் விமானங்கள் வானில் சாகசம்

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022 | கருத்துகள் (1) | |
புதுடில்லி:நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் ராணுவ வீரர்களின் பிரமாண்ட அணிவகுப்பு நடந்தது. இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து வீர சாகசம் நிகழ்த்தின. இந்தியாவின் 73வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் டில்லியில் உள்ள மறுசீரமைக்கப்பட்ட ராஜபாதையில்,
 தலைநகர் டில்லியில் குடியரசு தின விழா...கோலாகலம்!75 போர் விமானங்கள் வானில் சாகசம்

புதுடில்லி:நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் ராணுவ வீரர்களின் பிரமாண்ட அணிவகுப்பு நடந்தது. இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து வீர சாகசம் நிகழ்த்தின.

இந்தியாவின் 73வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் டில்லியில் உள்ள மறுசீரமைக்கப்பட்ட ராஜபாதையில், குடியரசு தின அணிவகுப்பு நடந்தது.


'அசோக சக்ரா'

விழாவுக்கு முன், 'இந்தியா கேட்' பகுதிக்கு அருகே அமைந்துள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதிகளும் உடனிருந்தனர்.விழா நடக்கும் ராஜபாதைக்கு பிரதமர் மோடி முதலில் வந்தடைந்தார்.

இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்ததும்,இருவரும் சேர்ந்து விழா மேடைக்கு சென்றனர். பின், தேசிய கீதத்துடன் குடியரசு தின விழா துவங்கியது.ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணமடைந்த போலீஸ் உதவி சப் - இன்ஸ்பெக்டர் பாபு ராமுக்கு, விழாவின் துவக்கத்தில் 'அசோக சக்ரா' பதக்கம் வழங்கப் பட்டது. அந்த பதக்கத்தை பாபு ராமின் மனைவி ரினா ராணி மற்றும் மகன் மணியிடம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். காலை 10:30 மணிக்கு அணிவகுப்பு விழா துவங்கியது.

ராணுவ வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்துச் சென்றனர். அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் சென்றன.இறுதியாக போர் விமானங்களில் விமானப் படையினர் சாகசங்கள் புரிந்தனர்.
முதல் முறையாகசுதந்திர பொன் விழா ஆண்டை முன்னிட்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பில், இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து வீர சாகசம் நிகழ்த்தின. பழமையான விமானங்கள் துவங்கி, இன்றைய நவீன 'ரபேல், சுகோய், ஜாகுவார் எம்.ஐ.,-17, சாரங், அப்பாச்சி, டகோட்டா' விமானங்கள் மூலம் வானில் விமானப்படை வீர சாகசம் நிகழ்த்தியது. இந்த சாகச காட்சிகள் விமானங்களின் பைலட் அறையிலிருந்து வீடியோ எடுக்கப்பட்டு, 'துார்தர்ஷன்' டிவி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு 25 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில்,இந்த முறை 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டது. விழா நடந்த ராஜபாதையை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டில்லி முழுதும் 27 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ராஜபாதையில் 'ஸ்கிரோல்'டில்லியில் குடியரசு தின அணிவகுப்பு விழா நடந்த ராஜபாதையின் இருபுறமும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீர தீர செயல்களை காட்சிபடுத்தும் வகையில் 'ஸ்கிரோல்' எனப்படும், நீளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றில், சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.


'ரபேல்' வீராங்கனை ஷிவாங்கி

குடியரசு தின அணிவகுப்பு விழாவில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான அலங்கார ஊர்தி இடம்பெற்றது. அதில், ரபேல் போர் விமானத்தின் முதல் பெண், 'பைலட்'டான ஷிவாங்கி சிங், அங்கம் வகித்தார். ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தியபடி அலங்கார ஊர்தியில் அவர் சென்றபோது, அங்கிருந்த பிரமுகர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். இந்திய விமானப் படையின் அலங்கார ஊர்தியில் இடம்பெறும் இரண்டாவது பெண் பைலட் இவர் ஆவார்.


அணிவகுப்பை வழிநடத்திய அதிகாரி

ராஜபாதையில் நேற்று நடந்த குடியரசு தின அணிவகுப்பை ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் விஜய் குமார் மிஸ்ரா தலைமைதாங்கி வழிநடத்திச் சென்றார்.


பழைய சீருடையில் பங்கேற்பு

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற நம் ராணுவ வீரர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். அதில் பங்கேற்ற வீரர்கள் நாடு சுதந்திரம் அடைந்தது முதல், ராணுவ வீரர்களால் உபயோகிக்கப்பட்டு வரும் சீருடைகளை அணிந்து இருந்தனர்.

அதன்படி இரண்டு ராணுவ படைப் பிரிவினர், பழைய ராணுவ உடைகளை அணிந்தும், முன்பு பயன்படுத்தப்பட்ட ரைபிள்களை ஏந்தியபடியும் அணிவகுப்பில் பங்கேற்றனர். மூன்றாவதாக பங்கேற்ற ஒரு படைப் பிரிவினர் எழுச்சிமிக்க கடற்படை ஊர்திகுடியரசு தின அணிவகுப்பில் இந்திய கடற்படைக்கு சொந்தமான அலங்கார ஊர்தி இடம் பெற்றிருந்தது.

1946ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி ஆங்கிலேயர்களுக்கு எதிராக, இந்திய கடற்படை வீரர்களின் கிளர்ச்சி ஏற்பட்டது. சுதந்திர போராட்டத்திற்கு வழிவகுத்த அந்த எழுச்சிமிக்க நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் கடற்படையின் ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.


சிறப்பு விருந்தினர்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதில் கட்டுமான தொழிலாளர்கள், முன்கள சுகாதார பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.பிரதமர் அணிந்த தொப்பி


குடியரசு தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகண்ட் மாநிலத்தின் பாரம்பரியமிக்க தொப்பியை அணிந்து வந்திருந்தார். அதில், 'பிரம்மக்கமலம்' என்ற ஒரு வகையான மலரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இதேபோல மணிப்பூர் மாநிலத்தின் பாரம்பரிய துண்டையும் அவர் கழுத்தில் அணிந்திருந்தார். அடுத்த மாதம் இவ்விரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.


டி.ஆர்.டி.ஓ.,வுக்கு இரண்டு ஊர்தி

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பல மாநிலங்கள் மற்றும் துறைகள் சார்பில் 25 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றிருந்தன. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில், இரண்டு அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. முதல் ஊர்தியில் இலகுரக போர் விமானமான, 'தேஜஸ்' மற்றும் அதற்கு உதவும், 'உத்தம்' என்ற நவீன ரேடார் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இரண்டாவது ஊர்தியில் நீர்மூழ்கி கப்பல்கள் நீண்ட நேரம் கடலுக்கடியில் இருப்பதற்கு உதவ டி.ஆர்.டி.ஓ., உருவாக்கிய புதிய நவீன இயந்திரம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.


75 போர் விமானங்கள் சாகசம்

சுதந்திர பொன் விழா ஆண்டை முன்னிட்டு நேற்று நடந்த குடியரசு தின பேரணியில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து வீர சாகசம் நிகழ்த்தின. பழமையான விமானங்கள் துவங்கி இன்றைய நவீன 'ரபேல், சுகோய், ஜாகுவார் எம்.ஐ.,-17, சாரங், அப்பாச்சி, டகோட்டா' விமானங்கள் மூலம் வானில் விமானப்படை வீர சாகசம் காட்டியது.

இந்த சாகச காட்சிகளை விமானங்களின் பைலட் அறையிலிருந்து வீடியோ எடுக்கப்ப்டடு, 'துார்தர்ஷன்' டிவி சேனலில் நேரடியாக ஒளிபரப்பானது.கவர்ந்த காசிஉத்தர பிரதேசத்தின் அலங்கார ஊர்தியில் கடந்த டிச.,ல் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாத் வளாகம் இடம்பெற்றிருந்தது.கங்கை நதிக் கரையில் இருந்து கோவிலுக்கு செல்வதற்கு அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதை விளக்கும் வகையில், அலங்கார ஊர்தி அமைந்திருந்தது.கடைபிடிக்கப்பட்ட சமூக இடைவெளி கொரோனா வைரஸ் பரவலையடுத்து பேரணியில் கடும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப் பட்டன. வழக்கமாக 1.25 லட்சம் பேர், அணிவகுப்புகளை பார்வையிட அனுமதிக்கப்படுவர். ஆனால், இம்முறை, குறைவானர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டது. 15 வயதுக்கு குறைந்தவர்களுக்கு அனுமதியில்லை. இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டவர்கள், முக கவசம் அணிந்து, 2 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றி அமர வைக்கப்பட்டிருந்தனர்.


மெய்க்காவல் குதிரை ஓய்வு


ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் இந்த குதிரைப் படை வீரர்கள் சிவப்பு கோட், தங்க நிற அங்கி, பளபளக்கும் தலைப் பாகை அணிந்து ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக வருவர். இதன்படி டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில்,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பாதுகாப்பாக குதிரைப் படை வந்தது. விழா முடிந்ததும் பாதுகாப்பு படையில் இடம் பெற்ற, 'விராட்' என்ற குதிரை ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் விராட் குதிரைக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பினர்.'ஹானோவர்' இனத்தைச் சேர்ந்த விராட், 2003ல் ஜனாதிபதியின் மெய்க்காவல் படையில் சேர்ந்து, 13 முறை குடியரசு தின விழாவில் பங்கேற்றுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X