பதாயூ:உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் கையில் கிருஷ்ணர் சிலையை பிடித்தபடி, காங்கிரஸ் வேட்பாளர் ரஜினி சிங் பாஹி, வேட்பு மனு தாக்கல் செய்தார்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10ல் துவங்கி, மார்ச் 7 வரை நடக்கிறது. இந்நிலையில் பதாயூ மாவட்டம், பதாயூ சதார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ரஜினி சிங் பாஹி, மனு தாக்கல் செய்தார். அப்போது கையில் கடவுள் கிருஷ்ணர் சிலையை அவர் வைத்திருந்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது:எனக்கு கிருஷ்ணர் மீது பக்தி அதிகம். அவர் தான் எனக்கு சாரதி. கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, குழந்தை கிருஷ்ணரின் சிலையை கையில் வைத்தபடி மனு தாக்கல் செய்தேன். தேர்தலில் வெற்றி பெற்றதுடன், மற்ற வேட்பாளர்கள் அனைவரையும், 'டிபாசிட்' இழக்கச் செய்தேன். இப்போதும் சட்டசபை தேர்தலில் அதேபோல் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சருக்கு 'நோட்டீஸ்'
உ.பி., மாநிலம் ஷிகாப்பூர் தொகுதியில் மாநில அமைச்சர் அனில் சர்மா, பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஷிகாப்பூர் தொகுதியில் அனில் சர்மாவின் மகன் குஷ் சர்மா, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் 'வீடியோ' பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது. இது பற்றி விளக்கம் கேட்டு அமைச்சர் அனில் சர்மாவுக்கு தேர்தல் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.இது பற்றி பா.ஜ., வட்டாரங்கள் கூறுகையில், 'பணம் வாங்கிய அனைவரும் டிரம்ஸ் கலைஞர்கள்' என தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE