சென்னை:''சென்னை உயர் நீதிமன்றத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு ஊழலை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என அ.தி.மு.க., தாக்கல் செய்துள்ள வழக்கில், பா.ஜ.,வும் இணையும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடந்த குடியரசு நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தேசிய கொடியை ஏற்றினார். பின், அண்ணாமலை அளித்த பேட்டி:தமிழகத்தில் ஏழு அற்புதமான நபர்களுக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. அவர்களுக்கு தமிழக பா.ஜ., சார்பில் பாராட்டுக்கள்.
சென்னையில் நடந்த குடியரசு பேரணியில் விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களின் சிலைகள் இடம்பெற்றிருந்தன. இந்த முயற்சியை பா.ஜ., பாராட்டுகிறது. சாகும் தருவாயில் உள்ள ஒரு குழந்தை பொய் சொல்லாது. இதனால் தான் அனைத்து நீதிமன்றங்களிலும் மரண வாக்குமூலத்திற்கு அதிக மரியாதை வழங்கப்படுகிறது.
சிறுமி, கடைசியாக என்ன பேசினாரோ, அதை தான் பா.ஜ., பேசி வருகிறது.சிறுமியின் வாக்குமூலம் உள்ள வீடியோவை, மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி சாட்சியாக ஏற்றுள்ளார். நீதிமன்றம் ஊர்ஜிதம் செய்த பின், விவாதம் நடத்த வேண்டியதில்லை.இந்த விஷயத்தில் உண்மை வெளியே வர வேண்டும் என்றால், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். ஏனெனில் விசாரணை துவங்கும் முன்னதாகவே மாநில அரசு, இதில் மதமாற்றம் நடக்கவில்லை என்கிறது.
இப்படி கூறினால் உண்மை எப்படி வெளிவரும்?உண்ணாவிரதத்தின் போது மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வேறு ஏதோ பேச வந்து, அவர் பேசிய வார்த்தை தவறாக வந்துவிட்டது. அந்த பேச்சில் அவருக்கு உடன்பாடில்லை. பின், வார்த்தை தவறாக திரிக்கப் பட்டு விட்டது.இதற்காக, நான் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். பன்னீர்செல்வத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. பழனிசாமியிடம் பேசிய போது வருத்தத்தையும், பா.ஜ., நிலைப்பாடு அது அல்ல என்றும் தெரிவித்தேன்.
அ.தி.மு.க., மீது பா.ஜ.,வுக்கு மிக பெரிய கடமை இருக்கிறது. லோக்சபா, ராஜ்யசபாவில் அனைத்து கஷ்டமான நிலையிலும் கூட, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., நின்றது. அ.தி.மு.க., தேசத்திற்கு தேவையான முக்கிய சட்டங்கள் வரும் போதெல்லாம் உடன் நின்றது.அ.தி.மு.க., -- பா.ஜ., உறவு இயற்கையாகவே பல கொள்கைகளில் ஒத்துப்போகின்றன.
இந்த உறவில் எந்த ஒரு காரணத்திற்காகவும் சிறு சலனம் கூட வரக் கூடாது என்பது, இரு கட்சிகளின் தலைவர்களின் நிலைப்பாடு.தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் குறித்து, அ.தி.மு.க., விரைவாக மக்களிடம் எடுத்துச் சென்றது. பரிசு தொகுப்பு ஊழலை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., மனு செய்துள்ளது. அந்த வழக்கில் பா.ஜ.,வும் இணையும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE