சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில், ஆறு ஆண்டுகளாக இழுபறியில் இருந்த தமிழகத்திற்கு தற்போது விடியல் கிடைத்துள்ளது. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும், பிப்ரவரி 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ல் நிறைவடைந்தது. அதன்பின் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. கடந்த 2019 டிசம்பரில், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ள, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த அக்டோபரில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, ஆறு ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. நீண்ட இழுபறிக்கு பின், நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக, மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் அளித்த பேட்டி:சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வார்டு மறு வரையறை செய்யப்பட்டதன் அடிப்படையில், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஓட்டுச்சாவடி பட்டியல்கள், வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும். அன்றே வேட்பு மனு தாக்கல் துவங்கும். தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும்.
ஓட்டளிக்க அனுமதி
ஓட்டுப்பதிவு, பிப்., 19 காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும்.கடைசி ஒரு மணி நேரம், அதாவது மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை, கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர்.
பிப்., 22 காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும். கொரோனா நிலையான வழிகாட்டு முறைகளை கடைபிடித்து, உள்ளாட்சி தேர்தலை சுதந்திரமாக, நேர்மையாக நடத்த, மாநில தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தேர்தல் அட்டவணை
* தேர்தல் அறிவிப்பு; வேட்பு மனு தாக்கல் துவக்கம் - ஜன., 28
* வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் - பிப்., 4
* வேட்பு மனுக்கள் பரிசீலனை - பிப்., 5
* வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - பிப்., 7
* ஓட்டுப்பதிவு நடக்கும் நாள் - பிப்., 19
* ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாள் - பிப்., 22
* தேர்தல் நடவடிக்கை முடியும் நாள் - பிப்., 24
* தேர்வான வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு - மார்ச் 2
* மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் - மார்ச் 4
பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார்
மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேட்டி:
* வேட்பு மனுக்கள் தாக்கல் முதல், சின்னங்கள் ஒதுக்கீடு வரையிலான நிகழ்வுகளை, கண்காணிப்பு கேமரா வழியே பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. 21 மாநகராட்சிகளில் 1,374; 138 நகராட்சி
களில் 3,843; 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டு உறுப்பினர் என, 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர்கள் நேரடி தேர்தல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும்
* உள்ளாட்சி தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய, வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படும்
* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பொருட்களை மாவட்ட அளவில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
ஓட்டுச்சாவடிகள்
* மாநகராட்சிகளில், 15 ஆயிரத்து 158; நகராட்சிகளில் 7,417; பேரூராட்சிகளில் 8,454 என மொத்தம், 31 ஆயிரத்து 29 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கும்
* இந்த தேர்தலில் 1.37 கோடி ஆண்கள்; 1.42 கோடி பெண்கள்; 4,324 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 2.79 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
மாநகராட்சிகளில், 1.54 கோடி வாக்காளர்கள்; நகராட்சிகளில் 64.92 லட்சம் வாக்காளர்கள்; பேரூராட்சிகளில் 59.79 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். சென்னை
மாநகராட்சியில் மட்டும் 61.18 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்
தேர்தல் அலுவலர்கள்
* தேர்தல் பணிக்கு 649 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 1,644 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு ஓட்டுச்சாவடிக்கு நான்கு பேர் என, ஓட்டுப்பதிவுக்கு 1.33 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
* மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வழியே ஓட்டுப்பதிவு நடக்கும். இதற்காக, 55 ஆயிரத்து 337 கட்டுப்பாட்டுக் கருவிகள், 1.06 லட்சம் ஓட்டுப்பதிவு கருவிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சென்னை மாநகராட்சிக்கு மட்டும் மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர்
செலவு உச்சவரம்பு
* பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 17 ஆயிரம்; நகராட்சி முதல் நிலை, இரண்டாம் நிலை வார்டு உறுப்பினர் பதவிக்கு, 34 ஆயிரம்; தேர்வு நிலை நகராட்சிகளில் சிறப்பு நிலை வார்டு உறுப்பினர் பதவிக்கு 85 ஆயிரம்; மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 85 ஆயிரம்; சென்னை மாநகராட்சிக்கு 90 ஆயிரம் ரூபாய் வரை செலவிடலாம்
மறைமுக தேர்தல்
* மாநகராட்சி மேயர் 21, துணை மேயர் 21; நகராட்சி தலைவர் 138; துணைத் தலைவர் 138; பேரூராட்சி தலைவர் 490, துணைத் தலைவர் 490 என, மொத்தம் 1,298 பதவிகளுக்கு, மார்ச் 4ல் மறைமுக தேர்தல் நடக்கும். தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. தேர்தல் அமைதியாக நடக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE