புதுடில்லி :தற்போது நாட்டில் பயன்பாட்டில் உள்ள 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளை பொது சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்த பின், அவற்றின் விலையை 275 ரூபாயாக நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவுக்கு எதிராக தற்போது கோவாக்சின் மற்றும் தடுப்பூசிகள் நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை மத்திய அரசு விலைக்கு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக அளித்து வருகிறது.
தற்போது இந்த தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றிலும் போடப்படுகின்றன. ஒரு, 'டோஸ்' விலை, கோவாக்சின், 1,200 ரூபாய் மற்றும் கோவிஷீல்டு, 780 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சேவை கட்டணம் 150 ரூபாயும் அடங்கும்.
இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை பொது சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதி கேட்டு இந் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இந்த தடுப்பூசிகளுக்கான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது.
இந்த தடுப்பூசிகளுக்கு பொது சந்தையில் விற்பனை செய்ய அனுமதி கிடைத்ததும், ஒரு டோஸ் விலை, 275 ரூபாயாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 150 ரூபாய் சேவை கட்டணமாக கூடுதலாக வசூலிக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE