உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
டி.தேவா, சங்கர் நகர், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராஜாஜி, ராமசாமி ரெட்டியார், குமாரசாமி, காமராஜர் மற்றும் பக்தவத்சலம் ஆகியோர் முதல்வர்களாக இருந்த போது, 'அரசு உத்தரவுகள்' மட்டுமே வந்து கொண்டிருந்தன.

'மாண்புமிகு தமிழக முதல்வர் காமராஜர் உத்தரவிற்கிணங்க...' என்றோ, 'மாண்புமிகு தமிழக முதல்வர் பக்தவத்சலம் வழிகாட்டுதலின்படி...' என்றோ, எந்த அரசு உத்தரவும் வெளியானதாக நமக்கு நினைவில்லை. தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, தன் ஆட்சி காலத்தில், 'கழக அரசு' என்று சொல்ல துவங்கினார்.
அதற்கு பின் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., ஒரு படி மேலே சென்று, 'அண்ணாதுரையின் அரசு' என்று சொல்ல ஆரம்பித்தார். அவருக்கு பின் முதல்வரான ஜெயலலிதா, பல படி மேலே சென்று, 'என்னுடைய அரசு' என்றார்.
பன்னீர் செல்வமும், பழனிசாமியும், 'மாண்புமிகு அம்மாவின் வழிகாட்டுதலின் படி...' என்று, அரசு உத்தரவுகளை வெளியிட்டனர். இதை எல்லாம், மக்கள் சகித்து கொள்ள பழகி விட்டனர்.
தற்போது, தி.மு.க., ஆட்சி கட்டிலில் அமர்ந்து கோலோச்ச துவங்கி, எட்டு மாதங்கள் ஆகிறது. தொட்டில் பழக்கம் சும்மா இருக்குமா? அமைச்சர்கள் அத்தனை பேரும், 'மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி...' என்ற வரிகளை சேர்க்காமல், எந்த அரசு உத்தரவுகளையும் வெளியிடுவதில்லை. இதை ஒரு கொள்கையாகவே, அவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.

இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை ஆராய்ந்தால், ஒரு விஷயம் விளங்கும்.அதாவது முதல்வர் ஸ்டாலினை தவிர, ஏனைய அமைச்சர்கள் அனைவருக்கும் எதையும் சுயமாக சிந்திக்க தெரியாது. முதல்வர் ஸ்டாலின், 'நில்' என்றால் நிற்கவும், 'சிட்' என்றால் உட்காரவும் மட்டுமே தெரியும்.
அவர்கள் தங்களது அன்றாட கடமையை கூட, முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தான் செய்கின்றனரோ? பொங்கல் தொகுப்பில் நடந்த குளறுபடியும், குடியரசு தின விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளும் முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி தானோ? 'ஐஸ்' வைப்பதற்கும் ஒரு அளவில்லையா? இப்படியா ஜன்னி ஜுரம் வரும்படி ஐஸ் வைப்பது?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE