சென்னை:''திராவிட இயக்கத்தின் கொள்கையை, இந்தியா முழுமைக்கும் சேர்க்கும் பணியை துவங்க இருக்கிறோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பல்வேறு அமைப்புகள் இணைந்து, 'சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம்' என்ற தலைப்பில், தேசிய இணைய கருத்தரங்கத்தை நடத்தின.தலைமை வகித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நம்மை இணைத்தது சமூக நீதி என்ற கருத்தியல் தான். திராவிட இயக்கம் போட்ட விதை, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் முளைக்க துவங்கி இருக்கிறது. அதன் அறுவடையைத் தான், இப்போது நாம் பார்க்கிறோம். தொடர்ச்சியான போராட்டத்தின் வழியாக, சமூக நீதிக்கான வெற்றியை அடைந்துஉள்ளோம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான, 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும் பெற்றிருப்பதன் வழியாக, சமூக நீதி வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.
இது சாதாரணமாக கிடைத்து விடவில்லை. மக்கள் மன்றத்திலும், பார்லிமென்டிலும், சட்டசபையிலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் வழியே, இந்த சாதனையை பெற்றிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில், தி.மு.க., மகத்தான பங்களிப்பை செய்து உள்ளது. ஏதோ பா.ஜ., அரசுதான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இட ஒதுக்கீடு உரிமையை துாக்கி கொடுத்ததுபோல், சிலர் பரப்புரை செய்கின்றனர்.
அவர்களுக்கு நடந்த உண்மை எதுவும் தெரியாது.கடந்த, 2020 மே மாதம் உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு போட்டது. 2021 ஜூலை மாதம் தான், பா.ஜ., அரசு இதை ஒப்புக் கொண்டது. இந்த உண்மைகளை அவர்கள் மறக்கலாம்; ஆனால் மறைக்க முடியாது.இதோடு இப்பணி முடிந்து விடவில்லை. சமூக நீதி என்பது சமூக சமத்துவம் ஆகும்.
அது கல்வி, வேலைவாய்ப்பில் மட்டுமல்ல; அனைத்து இடங்களிலும் உருவாக்கப்பட வேண்டும்.சமூக நீதியும், பெண்ணுரிமையும் தான் தலையாய லட்சியம். இந்த கொள்கையை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் பணியை, நாங்கள் துவங்க இருக்கிறோம். அகில இந்திய அளவில், சமூக நீதிக்கான கூட்டமைப்பை, விரைவில் துவக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE