திருத்தணி:''அரசு வழங்கிய தரமற்ற பொங்கல் தொகுப்பு விவகாரத்தால், இளைஞர் தீக்குளித்து இறந்த சம்பவம் வேதனைக்குரியது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்தவர் நந்தன், 65. அரசின் பொங்கல் தொகுப்பை பெற்ற இவர், புளியில் பல்லி இருந்தது குறித்து, பத்திரிகை, 'டிவி'க்களுக்கு தெரிவித்தார். இதனால், நந்தன் மீது திருத்தணி போலீசார் பொய் வழக்கு பதிந்ததாக கூறி, அவரது மூத்த மகன் குப்புசாமி, 36, இம்மாதம் 11ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், குப்புசாமியின் தந்தையை சந்தித்து, பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல் கூறினார்.பின், ராஜா அளித்த பேட்டி:தி.மு.க., அரசு, ஊழல் செய்து, தரமற்ற பொங்கல் தொகுப்பு வழங்கியுள்ளது. பத்து ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாததால், இந்த ஆட்சி காலத்திலேயே சம்பாதிக்க வேண்டும் என, தி.மு.க., ஊழல் செய்து வருகிறது.பொங்கல் தொகுப்பில் புளியில் பல்லி இருந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்ததால், காவல் துறையை ஏவி, நந்தன் மீது அரசு பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நந்தன், கூட்டுறவுத் துறை அமைச்சர் மீது, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருந்தால், அரசுக்கு தக்க பதில் அடி கிடைத்திருக்கும். நந்தன் மீது பொய் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பரை, அவரது மனைவி கண்முன்னே அடித்து துன்புறுத்திய காவல் துறையை, முதல்வர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். காவல் துறையினர் சட்டவிரோதமாக செயல்படக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE