சென்னை:'அ.தி.மு.க.,வில் தனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன' என, முன்னாள் எம்.பி., மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பின் சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவக்கிய போது, அவருக்கு முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பக்கபலமாக இருந்தார். அணிகள் இணைந்த பின் அவருக்கான முக்கியத்துவம் குறைந்தது.கட்சியில் முக்கிய பதவிகளை எதிர்பார்த்தார். சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரினார். எதுவும் நடக்கவில்லை.
கட்சியில் எந்த முக்கியத்துவமும் இல்லாத நிலையில், தன் முகநுால் பக்கத்தில், அவர் தன் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.'ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டபோதும், பாழாய்போன அம்மா பாசம் தான், என்னை வேறு எந்த முடிவும் எடுக்கவிடாமல் தடுக்கிறது.
இன்னும் எவ்வளவு காலத்திற்கு...' என கேள்வி எழுப்பி உள்ளார்.மேலும், 'ஜெயலலிதாவின் இதயத்தில் எனக்கு தனி இடம் இருந்தது. தேர்தல் கமிஷன் வைர விழாவில், ஜெயலலிதா அமர்ந்திருந்த நாற்காலியை, அவரிடம் கேட்டு பெற்று, அவரது நினைவாக பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்' எனவும், மைத்ரேயன் பதிவு செய்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE