திருச்சுழி:காதல் பிரச்னையில், காதலனின் தாயை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக, 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கே.வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி, 43; மகன் சக்தி சிவா 24. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணை காதலித்துள்ளார்.இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜன., 22ல் காதல் ஜோடி மாயமானது. நேற்று மாலை சக்தி சிவாவின் வீட்டிற்கு, உறவினர்களுடன் வந்த பெண்ணின் தாய், தன் மகள் எங்கே எனக் கேட்டு பிரச்னை செய்துள்ளார்.
அப்போது, மீனாட்சியை இழுத்துச் சென்று, சாலையில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர். பரளச்சி போலீசார், அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீனாட்சியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக 19 வயது பெண்ணின் தாயார், உறவினர்கள் நாகவல்லி, செல்வி, துரைப்பாண்டி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன் மீனாட்சியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். டவுன் போலீசார் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.--
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE