துாத்துக்குடி:துாத்துக்குடியில், விடுமுறை தினமான நேற்று மதுபானம் கேட்டு தகராறு செய்த கும்பல், டாஸ்மாக் கடையில் கள்ளத்தனமாக மது அருந்திய இருவரை சரமாரியாக வெட்டியதில் ஒருவர் இறந்தார்.
குடியரசு தினத்தையொட்டி நேற்று 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், துாத்துக்குடி மாவட்டத்தில் சில டாஸ்மாக் கடைகள் அருகில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தது.
இந்நிலையில், சின்னகண்ணுபுரம் டாஸ்மாக் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர், மதுபானம் கேட்டு, அங்கிருந்த ஊழியரிடம் தகராறு செய்தனர். மது தர மறுத்த நிலையில், அங்கிருந்து புறப்பட்ட அந்த கும்பல் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தனர். அப்போது, டாஸ்மாக்கில், மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ், 40, மாடசாமி ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் தங்களுக்கு மது தர மறுத்த டாஸ்மாக் ஊழியரின் நண்பர்கள் என நினைத்த அந்த கும்பல், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மாடசாமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த உதயமூர்த்தி, 22, ராபின், 26, கண்ணன், 22, ஆகியோரை கைது செய்தனர். வினோத் என்பவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE