காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக மைதானத்தில், 73-வது குடியரசு தின விழா எளிமையாக நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காலை 8:00 மணிக்கு,தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 25 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள், தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
பல அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 228 அரசு அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் பணி முடித்தமைக்கான 5 பேருக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது, காவல் துறை சரக துணைத் தலைவர் சத்தியபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருதி, இந்த ஆண்டு பள்ளிக் குழந்தைகள் கல்லுாரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது ரத்து செய்யப்பட்டது.
செங்கல்பட்டு
அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாக மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் ராகுல்நாத் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றிவைத்து, மூவர்ண பலுான் பறக்கவிட்டார்.காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக, 50 பயனாளிகளுக்கு, 42 லடசத்து 30 ஆயிரத்து 669 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறை அலுவலர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இவ்விழாவில், எஸ்.பி., அரவிந்தன், ஏ.எஸ்.பி., ஆதார்ஸ் பச்சேரா, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, நகராட்சியில், ஆணையர் ராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினர்.
* ஸ்ரீபெரும்புதுாரில் செயல்படும் 'பேஸ்' தொண்டு நிறுவனம் சார்பில், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் ஆகிய இரண்டு இடங்களில் ரத்ததான முகாம் நடந்தது. 180 தன்னார்வலர்கள் பங்கேற்று, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் செய்தனர்.
சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூரில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடந்த குடியரசு தின விழாவில்,ஸ்ரீபெரும்புதுார் முன்னாள் எம்.எல்.ஏ., பெருமாள் தேசிய கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.l வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒன்றிய தலைவர் தேவேந்திரன், தேசியக்கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
வாலாஜாபாத் பி.டி.ஓ.,க்கள் அமல்ராஜ், ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.l செங்கல்பட்டு தீயணைப்பு நிலையம் மற்றும் மீட்பு பணி அலுவலகத்தில், நிலைய அலுவலர் கார்த்திகேயன் ஏற்பாட்டில், உதவி மாவட்ட அலுவலர் திருநாவுக்கரசு முன்னிலையில், 73-வது குடியரசு தின விழா நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை மாவட்ட அலுவலர் ஜாஸ்மின் பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்து, சக வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு வீரர்கள்
ரவிகுமார், திருமலை, விவேகானந்தன் ஆகிய மூன்று பேருக்கு, பதக்கங்களை வழங்கி கவுரவப்படுத்தினார்.
* மாமல்லபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், கடந்த 1995 - 96ல், 10ம் வகுப்பு பயின்றோர், தற்போது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மின்சாதன பொருட்களை புதிதாக மாற்றி, அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய இருக்கைகள் அளித்து, 1 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் நன்கொடையாக வழங்கினர். குடியரசு நாளான நேற்று, பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடி, தங்கள் முன்னேற்றத்திற்கு உதவிய ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தனர்.
* திருப்போரூர் ஒன்றியம் கரும்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் நேற்று, தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தலைவர் ஏழுமலை, இருளர் இன மூதாட்டி கன்னியம்மாள், 65, என்பவரை தேசியக் கொடியை ஏற்றச் செய்தார். எம்மதமும் சம்மதம்; ஒற்றுமை குறிக்கும் வகையில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தோரை, கொடி கம்பம் அருகே நிறுத்தி, கொடி ஏற்றப்பட்டது.
* மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய அலுவலக வளாகத்தில், காவல் உதவி ஆய்வாளர் நீலகண்டன் தலைமையில், தேசிய கொடியேற்றப்பட்டது.
5வது முறையாக விருது
அரசு போக்குவரத்து கழக காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் வி.அர்ஜுனன், உத்திரமேரூர் பணிமனை கிளை மேலாளர் எம்.கருணாகரனுக்கு, சிறந்த பணிமனை கிளை மேலாளருக்கான விருது மற்றும் பணித்திறன் நற்சான்றிதழை வழங்கி பாரட்டினார்.
இது குறித்து, உத்திரமேரூர் பணிமனை கிளை மேலாளர் கருணாகரன் கூறியதாவது:கடந்த 2019, 2020 மற்றும் 2021ல் இரு முறை என, ஏற்கனவே நான்கு முறை விருது பெற்றுள்ளேன். பணிமனையில் உள்ள டிரைவர், கண்டக்டர், டெக்னீஷியன் என, அனைத்து ஊழியர்களின் ஒத்துழைப்பால், தமிழகத்திலேயே, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பஸ் இயக்க காலத்தில், பணிமனையின் 34 பஸ்களையும் இயக்கி, ஐந்தாவது முறையாக விருது வாங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE