காஞ்சிபுரம்:வெங்கச்சேரியில், செய்யாற்றின் குறுக்கே, புதிதாக கட்டப்பட உள்ள உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது.
உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில், வெங்கச்சேரி - மாகரல் இடையே, செய்யாறு குறுக்கிடும் இடத்தில், உத்திரமேரூர் ஒன்றியத்தையும், காஞ்சிபுரம் ஒன்றியத்தையும் இணைக்கும் பாலம் உள்ளது.கடந்த, 2015ல் பெய்த கன மழையால், வெங்கச்சேரி பாலம் சேதமடைந்தது. இதனால், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து, 2016ல், புதிய பாலம் கட்ட அப்போதைய அ.தி.மு.க., அரசு, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும், பாலம் அமைக்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, வெங்கச்சேரியில் புதிய பாலம் அமைக்க தமிழக அரசு, 21.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. கடந்த ஆண்டு அக்., மாதம், ஆற்றின் நிலத்தடியில் ஆழ்துளை குழாய் மூலம், மண் மாதிரி சேகரிக்கப்பட்டு, மண் அடுக்குகளின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.புதிய பாலத்திற்கு அணுகுசாலை மற்றும் பாலம் கட்டுமானப் பணி நிறைவு பெறும் வகையில், போக்கு வரத்திற்காக தற்காலிக மாற்றுப்பாதை அமைப்பதற்கான ஆய்வு பணியும் நடந்து முடிந்தது.
கட்டுமானப் பணி துவங்க உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நவம்பரில் பாலம் உடைந்து சேதமானது.இந்நிலையில், புதிய பாலம் கட்டுமானப்பணிக்கான பூமி பூஜை இன்று காலை, 10:30 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.புதிய பாலம் கட்டுமானப்பணி, 18 மாதங்களில் நிறைவு பெறும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE