மதுரை : மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவு பெறும் நிலையில், கட்டுமான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.
மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2019 ஜன., 27ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது, 45 மாதங்களுக்குள் 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி, நர்சிங் கல்லுாரி அமையும் என, தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் அடிக்கல் நாட்டி, இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
![]()
|
இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடை 1,464 கோடி ரூபாயில் இருந்து, 2,000 கோடி ரூபாயாக உயர்த்தி, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையில் நிதியுதவி பெற திட்டமிட்டு, முழு திட்ட அறிக்கையும் அனுப்பப்பட்டது. இதில், 85 சதவீதம் நிதி வழங்க ஜப்பான் நிதி நிறுவனம் ஒப்புதல் வழங்கியது.
ஜப்பான் நிதி நிறுவனமும், மத்திய சுகாதாரத் துறையும் 2021 மார்ச் 26ல் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, அந்நிறுவனம் கட்டுமானத்திற்கு 1,627 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.இந்த ஒப்பந்தம் செய்து ஒன்பது மாதங்களாகியும், கட்டுமான பணிக்கு டெண்டர் அறிவிப்பு கூட வெளியாகவில்லை என, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:அனைத்து மாநிலங்களிலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் போது, அதன் நிர்வாக அலுவலகம் அந்தந்த மாநிலங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன.மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாக அலுவலகம் டில்லியில் உள்ளது. ஜப்பானிய நிறுவனத்தின் நிதி போக 360 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வர வேண்டும். மத்திய அரசு உடனடியாக கட்டுமான பணிகளை துவங்க
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
குரல் தர வேண்டும்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல் நிர்வாக குழு கூட்டம், ஜூன் 2021ல் நடந்தது. கட்டுமான பணிகள் 2023ல் துவங்கி 2026ல் முடிக்க திட்டமிடப்பட்டது. பிரதமர் அடிக்கல் நாட்டிய போது, 2022 செப்டம்பருக்குள் பணி முடிக்கப்படும் என்றார். எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது துவங்கும் என்றே தெரியாது என, கடந்த மாதம் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதில் அளித்துள்ளது. தமிழக எம்.பி.,க்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து, கட்டுமான பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாண்டியராஜன், சமூக ஆர்வலர், தென்காசி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE