வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகத்தில், 'ஜல்ஜீவன்' திட்ட குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுதும் உள்ள கிராமங்களில், வீடுதோறும் குடிநீர் இணைப்பை வழங்க 'ஜல்ஜீவன்' திட்டத்தை மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தின் 12 ஆயிரத்து 525 கிராமங்களில் உள்ள, ஒரு கோடி வீடுகளுக்கு, 2024 மார்ச்சிற்குள் குடிநீர் இணைப்பை வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 4,600 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பணிகள், 2019 முதல் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகின்றன. வீடு தோறும் தினமும் 55 லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகள் ஊரக வளர்ச்சி துறை வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் பணிகள் முறையாக நடக்கவில்லை. பணிகள் முடிந்த மாவட்டங்களில், வீடுகளுக்கு குடிநீர் வினியோகத்தை இன்னும் துவக்கவில்லை. இதுவரை திட்ட இலக்கில் 50 சதவீதத்தை மட்டுமே எட்ட முடிந்துள்ளது. திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், நீல நிற பிளாஸ்டிக் பைப்புகள், தங்க நிற திருகும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டு, வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
ஓராண்டு கூட முடியாத நிலையில், தரமற்ற பிளாஸ்டிக் மற்றும் திருகும் பிளாஸ்டிக்சேதமடைந்து விட்டது. இப்பொருட்கள், ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டதால், அதே அளவுக்கான பைப், திருகு குழாய்கள் கடைகளில் கிடைப்பதில்லை. இதனால், சேதமடைந்த குழாய்களை சரிசெய்ய முடியாமல், ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
தமிழகத்தில், இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருவதை அறிந்த மத்திய ஜல்சக்தி அமைச்சகம், தமிழகத்தில் பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டுள்ளது.குழாய் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு, பிப்ரவரி இறுதிக்குள் குடிநீர் இணைப்பை வழங்கவும் அறிவுறுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE