தமிழக நிகழ்வுகள்
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அரைநிர்வாணப் போராட்டம்
கோவை-ஊழியர்களை மரியாதையின்றி பேசும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்து, தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், ஊழியர்களை மரியாதை குறைவாக நடத்துவதாக, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கண்டித்து, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று தலைமை அலுவலகத்தில், அரை நிர்வாணப் போராட்டம் நடந்தது.தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் பெரியசாமி கூறுகையில், ''தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலத்தில் அதிகாரிகள் ஊழியர்களை மிகவும் மரியாதையின்றி நடத்துகின்றனர்.
அனைத்து ஊழியர்களும் மனநிம்மதியின்றி பணியாற்றி வருகின்றனர்.கொரோனா தொற்று காலத்தில், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தகவல்களை கூறினாலும், அதை ஏற்க மறுக்கின்றனர்.சில அதிகாரிகள் விடுப்பை அனுமதிக்காமல், 'ஆப்சென்ட்' போட்டு ஊதியப்பிடித்தம் செய்து விடுவேன் என்கின்றனர். சஸ்பெண்ட் செய்து விடுவேன் என, மிரட்டி அனைவரின் மன அமைதியை கெடுத்தும், ஊழியர்கள் மத்தியில் தர்ம சங்கடத்தை உருவாக்கியும் வருகிறார்கள்,'' என்றார்.ஊழியர்களின் இந்த திடீர் போராட்டத்தால், பரபரப்பு ஏற்பட்டது.
புதுமாவிலங்கையில் மணல் கடத்தல் அமோகம்
புதுமாவிலங்கை:புதுமாவிலங்கை ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் மற்றும் குட்டையில் மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது புதுமாவிலங்கை ஊராட்சி. இங்குள்ள மெட்ரோ குடிநீர் நீரேற்றும் நிலையம் அருகே, அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.இப்பகுதியில் தான், தாலுகா அலுவலகம், கிளைச்சிறை போன்ற அரசு அலுவலகங்களுக்கு இடம் தேர்வு செய்யும் பணிகளும் நடந்து வருவதாக அரசு ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இப்பகுதியில், தற்போது, மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. இதேபோல் ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அருகே உள்ள அம்மன் கோவில் பகுதியில் ஊராட்சி குட்டையில் மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது.
காவல் துறையினரும், வருவாய் துறையினரும் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் மற்றும் குட்டை பகுதியில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏற்கனவே, புதுமாவிலங்கை பகுதியில் கூவம் ஆற்றில் மணல் கடத்தல் நடந்து வரும் நிலையில், தற்போது அரசு நிலம் மற்றும் குட்டையில் மணல் கடத்தல் நடைபெறுவது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.51 லட்சம் மோசடி தனியார் அதிகாரி கைது
திருநெல்வேலி:தொழில் துவங்க கடன் பெற்றுத் தருவதாக கூறி வங்கிப் பணம் ரூ. 51 லட்சத்தை மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் ஆக்சிஸ் வங்கி செயல்படுகிறது. அதன் அருகில் கெஸ் கார்ப்பரேட் என்ற தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களுக்கு தொழில் துவங்க கடன் பெற்றுத் தரும் பணியை செய்தது. அந்த நிறுவனத்தில் உதவி தொடர்பு அதிகாரியாக 2018 - 2019 ல் பணியாற்றியவர் கார்த்திக் ராஜா 35.
இவர் திருக்குறுங்குடி, வள்ளியூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 426 பேருக்கு சிறுதொழில் துவங்க ரூ 26,000 வீதம் கடன் பெற்று தருவதாக அடையாள அட்டை, படம் விபரங்களை பெற்றுள்ளார்.அதன் தொடர்ச்சியாக ரூ. 51 லட்சத்து 88 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் யாருக்கும் கடன் வழங்கவில்லை.இதுகுறித்து கெஸ் கார்ப்பரேட் நிறுவன மேலாளர் பிரவீன் புகாரின்பேரில் போலீசார் வடக்கு வள்ளியூரை சேர்ந்த கார்த்திக் ராஜாவை கைது செய்தனர்.
போன் பேசியபடி தேசியக்கொடி ஏற்றியவரால் சர்ச்சை
கிருஷ்ணகிரி:ஒரு கையில் மொபைல் போன் பேசியபடி, ஒரு கையில் தேசியக் கொடியை ஊராட்சி தலைவரின் கணவர் ஏற்றியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே ராமசந்திரம் கிராமத்தில், ஊராட்சி துவக்கப் பள்ளியில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியர் தலைமையில், ஊராட்சி தலைவர் வளர்மதி சார்பில், அவரது கணவர் குணசேகரன், இடது கையில் மொபைல் போன் பேசியபடியே, வலது கையால் தேசியக் கொடியை ஏற்றினார்.
தலைமை ஆசிரியர், ஊராட்சி தலைவர் அருகில் இருக்க, எந்தப் பதவியிலும் இல்லாத தனி நபர் கொடியேற்றியதுடன், அதையும் போன் பேசியபடி ஒரே கையில் ஏற்றியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கட்டட இடிபாடுகள் விழுந்து விபத்து அதிர்ஷ்டவசமாக தப்பிய தாய், மகன்
வேளச்சேரி : வேளச்சேரியில், பழைய கட்டடம் இடிக்கும்போது, இடிபாடுகள் பக்கத்து வீட்டில் விழுந்ததில், இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.வேளச்சேரி காவல் நிலையம் அருகில், ஆறு மாடியில் தனியார் நிறுவனம் உள்ளது.

இதன் கட்டடம் மிகவும் பழுதடைந்து இருந்ததால், புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.இதற்காக, பழைய கட்டடம் இடிக்கும் பணி, இரவு, பகலாக நடக்கிறது. பழைய கட்டடத்தை இடிக்கும்போது, பக்கத்தில் உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும்.இரவில், அதிக சத்தம் எழுப்பும் இயந்திரம் பயன்படுத்தக்கூடாது, கட்டட கழிவுகளை பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மாநகராட்சி விதித்துள்ளது.இதை மீறி, கட்டடம் இடிக்கும் பணி நடந்தது. இது குறித்த புகாரை அடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இருதினங்களுக்கு முன், கட்டடம் இடிக்கும் நிறுவனத்தை எச்சரித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கட்டடம் இடிக்கும் பணியின்போது ஒரு பகுதி, அருகே வசிக்கும், தினேஷ் என்பவரது வீட்டில் விழுந்தது.இதில், வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்தது. சுவர் அருகே நின்ற மூர்த்தி, 40, மற்றும் அவரது தாய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பாக, தினேஷ் வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கட்டடம் இடிக்கும் பணியை நிறுத்தி, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுப்பு
சென்னை:குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சிலர் எழுந்திருக்காமல் அமர்ந்திருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், நேற்று குடியரசு தின விழா கொண்டாடப் பட்டது. வங்கியின் மண்டல இயக்குனர் சுவாமி, தேசியக் கொடியேற்றி உரையாற்றினார்.
விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, வங்கி ஊழியர்கள் சிலர் எழுந்து நிற்கவில்லை. நிகழ்ச்சி முடிந்த பின், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்க மறுத்தவர்களிடம், சிலர், 'ஏன் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்திருக்கவில்லை?' என கேள்வி எழுப்பினர்.
அதற்கு, அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என, உயர் நீதிமனறம் கூறியதாக தெரிவிக்க, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வங்கி உயர் அதிகாரிகள், 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிப்பது உறுதி செய்யப்படும்' என தெரிவிக்க, பிரச்னை முடிவுக்கு வந்தது.
வீடுகளில் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டையில், வீடுகளில் நகை, பணம் திருடியவழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டை பகுதியில் மூன்று வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து ஜன., 7ல் நகை, பணத்தை திருடினர்.
கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்தனர். தேனி மாவட்டம் அரண்மனைப் புதுார் பகுதியைச் சேர்ந்த முத்தையா 35, மணிகண்டன் 25, ரங்கநாதன் 37 ஆகியோர் ஏற்கனவே கைதாகியுள்ளனர். அரண்மனை புதுாரைச் சேர்ந்த காளியப்பன் 28 தற்போது கைது செய்யப்பட்டுஉள்ளார். இவரிடமிருந்து 2 பவுன் நகை, ரூ.60ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய நிகழ்வுகள்
ரயில்வே தேர்வில் குளறுபடி: பீஹாரில் ரயிலுக்கு தீ வைப்பு
புதுடில்லி:ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் தொழில்நுட்பம் சாராத பிரிவினருக்கான முதன்மை தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, பீஹாரில் இளைஞர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர்.

ரயில்வே துறை காலிபணியிடங்களை நிரப்ப ஆர்.ஆர்.பி., எனப்படும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இதன்படி தொழில்நுட்பம் சாராத பிரிவுகளுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு 2019ல் வெளியானது. கணினி வாயிலான முதன்மை தேர்வுகள் நடந்த நிலையில், சமீபத்தில் அதன் முடிவுகள் வெளியானது.இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்ட தேர்வில் பங்கேற்க வேண்டும்.
இந்நிலையில் தேர்வு முடிவில் குளறுபடிகள் நடந்துள்ளதாக, அதில் பங்கேற்றவர்கள் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து தேர்வு முடிவுகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:சமீபத்தில் வெளியான தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகளுக்கு எதிராக, அதில் பங்கேற்றோர் போராட்டம் நடத்தினர். இதனால் தேர்வு மீதான அடுத்தகட்ட பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.முதன்மை தேர்வில் பங்கேற்றோர் தெரிவிக்கும் புகார்களை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தங்கள் கருத்துகளை பிப்., 16 வரை தெரிவிக்கலாம். அவற்றை ஆய்வு செய்து இறுதி அறிக்கையை மார்ச் 4ம் தேதிக்குள், ரயில்வே அமைச்சகத்திடம் உயர்மட்டக் குழு தாக்கல் செய்யும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே ரயில்வே தேர்வில் பங்கேற்றோர், பீஹாரின் கயா ரயில் நிலையத்திற்கு திரண்டு வந்து, அங்கு நின்ற ரயிலுக்கு தீ வைத்தனர். ரயில் நிலைய பொருட்களை சூறையாடிய அவர்கள், தண்டவாளத்தை சேதப்படுத்தினர்.ரயிலில் பற்றிய தீயை தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர். வன்முறையில் ஈடுபட்டோரை, ரயில்வே போலீசார் அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையே ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவது நல்லதல்ல. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE