சென்னை : தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னையில் இன்று (ஜன.,27) துவங்கியது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் நாளை துவங்குகிறது. தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, 11 அரசு மருத்துவ கல்லுாரிகள் உட்பட, மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் இரண்டு அரசு பல் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. மாநில ஒதுக்கீட்டிற்கு, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் 6,999 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 1,930 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 1,145 எம்.பி.பி.எஸ்., - 635 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, 2021 - 22ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டிற்கு 24 ஆயிரத்து 949 மாணவர்களும்; நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 14 ஆயிரத்து 913 மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான பட்டியலில் 1,806 பேர் உள்ளனர்.

விடுபட்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினர் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று நடைபெற்றது.
நாளை முதல் இரண்டு நாட்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் உள்ள, 436 எம்.பி.பி.எஸ்., - 97 பி.டி.எஸ்., இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். பொது பிரிவு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங், 30ம் தேதி முதல், https://www.tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்கள் வாயிலாக நடைபெறும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE