சின்னசேலம்-சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தில் இளைஞர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தமிழக அரசு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை ஒழிப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பை, வாழை இலை, பாக்கு மர இலை, காகித சுருள், உலோகத்தாலான குவளைகள் போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், சின்னசேலம் அடுத்த எரவார் கிராமத்தில் அப்பகுதிஇளைஞர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி, 700க்கும் மேற்பட்ட துணிப்பைகளை அச்சிட்டு கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.மேலும் கிராமத்திலுள்ள அனைத்து மளிகை கடை உரிமையாளர்களையும் அழைத்து, 'பிளாஸ்டிக்கை ஒழித்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' என உறுதிமொழி ஏற்றனர். அரசு பிளாஸ்டிக் ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், இளைஞர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பொதுமக்களின் பாராட்டை பெற்றது.